புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 23 ஆம் தேதி 13 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.  மீன்பிடிக்க சென்ற காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, ரமேஷ், திலீபன், சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார், பால்மணி, கவியரசன், நாகை மாவட்டத்தை சேர்ந்த சத்தியநாதன், நிலவரசன், ஆறுமுகசாமி, கிஷோர் மற்றும் கோகுல் ஆகிய 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்கள் மற்றும் விசைப்படகையும் விரைவாக மீட்டு தர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 




 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கோட்டுச்சேரி மீனவ கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது மீனவப் பெண்கள் அவரின் காலில் விழுந்து கதறி அழுதனர். மீனவர்களை படகுகளோடு  மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



 

வட்டிக்கு கடன் வாங்கி படகு செய்திருப்பதாகவும் மூன்று மாதம் கூட அந்த படகை பயன்படுத்த வில்லை என்றும், போதிய வருமானம் கிடைக்காமல் இருந்த நிலையில் படகுகள் இல்லையென்றால் தாங்கள் குடும்பத்தோடு சாக வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடன் கொடுத்தவர்கள் வீடு ஏறி வந்து வட்டி கேட்கும்போது படகையும் மீனவர்களையும் இலங்கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் வாழமுடியாத நிலையில் இருப்பதாக மீனவப் பெண்கள் கதறி அழுதனர்.

 



 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா,இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் பேசி இருப்பதாகவும், விரைவில் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.