தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.13 லட்சத்தை மோசடி செய்த இரண்டு பேரை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து வெளிநாட்டு ஆசை
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (30). பி.இ.படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த எண்ணில் பேசிய மர்ம நபர் தான் ஜேஎம் கேரியர் சொலிஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் கனடாவில் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல தவணைகளில் பணம் மோசடி
தொடர்ந்து சக்கரபாணி அந்த மர்ம நபரின் பேச்சை நம்பி வாட்ஸ் அப் மூலம் தனது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்களை அனுப்பியுள்ளார். அப்போது அந்த நபர் விண்ணப்ப கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என தனது வங்கி கணக்கை கொடுத்துள்ளார். தொடர்ந்து 2022 ஜூலை மாதம் முதல் பல தவணைகளில் சக்கரபாணி அந்த மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.2.04 லட்சத்தை அனுப்பி உள்ளார்.
மேலும் இந்த தகவலை அறிந்த சக்கரபாணியின் நண்பர் மதன் பாபுவும் தனக்கு வெளிநாட்டில் வேலை பெற்று தரக்கூறியதை அடுத்து அவருக்கும் கனடாவில் வேலை வாங்கி தருவதாக அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார். மதன் பாபுவும் அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.2.09 லட்சத்தை பல தவணைகளில் அனுப்பியுள்ளார்.
செல்போனை சுவிட்ஸ் ஆப் செய்த மர்மநபர்
பல மாதங்கள் கடந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தராமல் அந்த மர்ம நபர் இழுத்தடித்து வந்துள்ளார். கனடாவில் வேலை வாங்கி தராவிட்டால் பரவாயில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என சக்கரபாணி மற்றும் மதன்பாபு இருவரும் அந்த மர்ம நபரிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த மர்ம நபரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இருவரும் உணர்ந்தனர். இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் சக்கரபாணி புகார் செய்தார்.
செல்போன் டவர் சிக்னலை வைத்து கண்டுபிடித்தனர்
இதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பணம் பெற்ற மர்ம நபர்களின் செல்போன் டவர் சிக்னல் ஈரோடு மாவட்டம் புது பாலம் கிராமடை பகுதியை காட்டியுள்ளது. தொடர்ந்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள், போலீசார் இளையராஜா ஜெகன் ஆகியோர் கொண்ட தனி படை ஈரோடு மாவட்டம் கிராமடைக்கு விரைந்தது.
மோசடி செய்த 2 பேர் கைது
மேற்படி கிராமடையில் தற்காலிகமாக தங்கி இருந்த ஈரோடு மாவட்டம் பவானி காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ஜெயானந்தன் (30), திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாமணி பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகன் விவேக் (29) ஆகிய ஆகிய இருவரும் சக்கரபாணியிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதை எடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். ஜெயானந்தன் மற்றும் விவேக் ஆகியோர் மீது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பல புகார்கள் கொடுத்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஏமாறாதீங்க... சைபர் க்ரைம் போலீசார் அட்வைஸ்
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், வெளிநாட்டில் வேலை தருவதாக கூறும் போலியான நிறுவனங்களின் விளம்பரங்களை கண்டு பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். சைபர் கிரைம் தொடர்பான புகார்களை 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தினர்.