மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முக்காடு போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் டி.என் ஜி.இ.ஏ மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநிலத் தலைவர் கலா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர்.




இந்தப் போராட்டத்தில், தொழில் நுட்ப கல்வி திறன் பெறாத சாலை பணியாளர்களுக்கு ஊதியம் 5200 ரூபாயில் இருந்து  20200 ரூபாயும், தர ஊதியம் ரூபாய் 1900 வழங்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு PBMC ஒட்டுமொத்த ஒப்பந்த நடைமுறையை கைவிடப்படுவதாக அறிவித்தாலும், புதுப்பிக்கப்படும் நெடுஞ்சாலைகளை தனியார் ஐந்து ஆண்டுகள் பராமரிக்கும் நடைமுறையை ரத்து செய்து பராமரிப்பு பணியை அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்காடு போட்டு  போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர்.




நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்காக மேற்கு வங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 லட்சம் சாக்குகளை, குடோன்களில் லோடுமேன்கள் இறக்க மறுத்ததால் நுகர்வோர் வாணிபக்கழக அலுவலக வாசலில் லாரியை நிறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டம்.


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை ரயில் வேகன்கள் மூலம் 20 லட்சம் சாக்குகள் கொண்டு வரப்பட்டன. இவற்றை லாரிகள் மூலம் மயிலாடுதுறை, மாணிக்கப்பங்கு, எடமணல் மற்றும் எருக்கூரில் உள்ள குடோன்களுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. இதில், எடமணல் குடோன்களில் பணியாற்றும் லோடுமேன்களுக்கு கடந்த சில வாரங்கனாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 




இதனால், சித்தர்காட்டில் உள்ள லோடுமேன்கள் சாக்குகளை இறக்க மறுத்து விட்டதால் கடந்த ஐந்து நாட்களாக 100 -க்கும் மேற்பட்ட லாரிகள் சித்தர்காடு நுகர்வோர் வாணிபக் கழக குடோன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 நாட்களாக லாரிக்கு வாடகை யார் தருவது என்ற கேள்வி எழுந்ததால், மேற்கொண்டு வேறு வேலைகளுக்கு லாரிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.




இதுகுறித்து, நுகர்வோர் வாணிபக் கழக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் லாரி உரிமையாளர்கள் மயிலாடுதுறை சித்தர்காடு நவீன அரிசி ஆலை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு பிரதான வாயிலில் லாரியை நிறுத்தி வேறு எந்த வாகனங்களும் உள்ளே செல்லாதவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, லோடுமேன்களுடன் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அவர்களுக்குரிய கூலி வழங்கப்பட்டதால், லோடு மேன்கள் சாக்கு பண்டல்களை இறக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, லாரி உரிமையாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.