தஞ்சாவூர்: தஞ்சை அருகே சாலை அகலப்படுத்தும் பணிகள் நடப்பது குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் அறிவிப்பு பலகை அல்லது ரிப்ளெக்டர்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியிலிருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் எவ்வித எச்சரிக்கை அறிக்கையும் இல்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.
தஞ்சை அருகே ராமநாதபுரம் சாலை வழியாக வண்ணாரப்பேட்டை, 8 கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இருச்சக்கர வாகனத்தில் இரவில் ஊருக்கு திரும்புகின்றனர். இதேபோல் தஞ்சையிலிருந்து பூதலூர் அரசு அலுவலகங்கள், திருக்காட்டுப்பள்ளி உட்பட பல பகுதிகளில் பணியாற்றுபவர்கள் இரவு பணி முடிந்து தங்களின் பைக்குகளில் இவ்வழியே தான் வீடுகளுக்கும் திரும்புகின்றனர். இதனால் இரவு சுமார் 10 மணி வரை இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
மேலும் இப்பகுதி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பைக்குகள், கார், ஆட்டோ, லோடுவேன், லாரி, டிராக்டர்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பல இடங்கள் பழுதடைந்து இருந்தது. தஞ்சை மற்றும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆவாரம்பட்டி, புதுகல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் சாலையாக இது உள்ளது. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சென்று வரும்.
இந்நிலையில் இந்த சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளதால் இந்த சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையின் ஒருபுறம் பள்ளம் பறிக்கப்பட்டு, அந்த மண் எதிர்புறத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒற்றையடிப்பாதை போல் இந்த சாலை மாறியுள்ளது. இந்த பள்ளம் பறிக்கப்பட்ட பகுதியில் மண் மூட்டைகள் மட்டும் வரிசையாக வைத்துள்ளனர். அதில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஏதும் ஒட்டப்படவில்லை.
இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வெகு அவதிக்கு உள்ளாகும் நிலை உள்ளது எதிர்புறத்தில் இருந்து வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே பள்ளம் பறிக்கப்பட்ட பகுதியில் அதுகுறித்து எச்சரிக்கும் விதத்தில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.