தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட, அண்ணா சிலையிலிருந்து கீழவாசல் செல்லும் சாலையின் ஒரத்தில் அறிஞர் அண்ணா காலத்தில், பர்மா நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, 56 பேருக்கு கடைகள் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டன.  அங்கு செருப்பு, செல்போன், ரெடிமேட் டிரஸ், உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்திருந்தனர். தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன முறையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலையம் பணிகள் முடிவடைந்து, கடைகள் ஏலம் விட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதே போல்  மணிக்கூண்டு, அய்யன்குளம், சாமந்தகுளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த சில வருடங்களாக பலத்த மழை பெய்தால், மழை நீர் செல்ல முடியாமல், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வந்தது. இதே போல்  கடந்த மழை காலங்களில் இது போன்ற நிலை ஏற்பட்டது.




இதனையறிந்த  மாநகராட்சி அதிகாரிகள், பழங்காலத்திலுள்ள வடிகால் வாய்க்கால்கள், மழை நீர் செல்வதற்காக உள்ள வாய்க்கால்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.அப்போது, அண்ணா சிலையிலிருந்து, கீழவாசல் செல்லும் வடதிசையில் மழை நீர் செல்வதற்காக உள்ள வாய்க்கால் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அந்த வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாததால், அதிகாரிகள், ஆய்வு செய்து வந்தனர்.  அப்போது, பர்மா நாட்டிலிருந்து வந்தவர்களுக்காக கொடுத்துள்ள கடைகளில் கீழ் வாய்க்கால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையறிந்த அதிகாரிகள், வாய்க்காலை துார் வார வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெற்று வருவதால், சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என கூறி கடைகளை காலி செய்ய உத்தரவிட்டார். ஆனால் கடை வியாபாரிகள், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், வணிகர் சங்கங்களை சேர்ந்தவர்கள், கடைகளை காலி செய்ய மாட்டோம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதன் பின்னர் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, வாய்க்கால் மேல் கட்டப்பட்டிருந்த அனைத்து கடைகளையும் பொக்லீன் இயந்திரம் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது.பழைய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கினால், செல்ல முடியாமல் அப்படியே நிற்கும், சில நேரங்களில் பாதாள சாக்கடைக்குள்ளும், அல்லது வேறு சந்தில் உள்ள சாக்கடைகளின் வழியாக சென்று மழை நீர் வடியும்.




இதனால் அனைத்து வணிகர்கள், பொது மக்கள், பாதசாரிகள், தரைகடை வியாபாரிகள், வாகன ஒட்டிகள் என அனைவரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.தற்போது மழை நீர் செல்லும் வாய்க்கால் இருக்கும் பகுதியை கண்டறிந்து, அதிரடியாக கடைகளை அகற்றி, வாய்க்காலை துார் வாரும் பணி நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில்,தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள், சாக்கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும் அதிரடியாக இடித்து, அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் இனி வரும் நாட்களில் வாகன நெரிசல் ஏற்படாமலும், பலத்த மழை பெய்தால், சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்கும். இது போன்ற அரசு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.