தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளை வரும் 7ம் தேதி பூட்டிவிட்டு வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் 4 துறைகளின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இதனால், பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு துறையையும் திருப்திபடுத்த வேண்டிய நிலையில் பணியாளர்கள் உள்ளனர். எனவே, பொது விநியோகத் திட்டத்துக்கு என தனித் துறை உருவாக்கப்பட வேண்டும். நியாய விலைக் கடையிலிருந்து மக்களுக்கு பொருட்கள் செல்லும்போது விற்பனை முனைய கருவியையும், அக்கடையிலுள்ள எடை இயந்திரத்தையும் இணைத்து வழங்கும் முயற்சியை அரசு மேற்கொள்வதை வரவேற்கிறோம்.
அதற்கேற்ப நியாய விலைக் கடைக்கு வரக்கூடிய பொருட்களும் சரியான எடையில் இருக்க வேண்டும் என்பதை ஏற்க அரசு மறுத்து வருகிறது. கிடங்கிலிருந்து நியாய விலைக் கடைக்கு பொருட்கள் வருகிறபோது, அக்கிடங்கில் இருக்கக்கூடிய எடை இயந்திரத்தையும், கணினியையும் இணைத்து சரியான எடையில் பொருட்களைக் கடைக்கு அனுப்ப வேண்டும்.
பணியாளர்களிடம் பிடித்தம் செய்யக்கூடிய தொகைக்கு சரியான வரவு செலவு கணக்கு கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளுக்கு இல்லை. இதில், கோடிக்கணக்கில் மோசடி நிகழ்வதாகக் கருதுகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வரும் 7ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக் கடைகளையும் பூட்டிவிட்டு, ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து, அனைத்து மாவட்டத் தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.