ஒவ்வொருவரின் மனதிலும் விதவிதமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலரது எண்ணங்கள் மட்டும் படைப்புகளாக வெளி வருகின்றன. அனைத்து வசதிகள் இருந்தும், பலவித பயிற்சிகள் கொடுத்தும் அவர்கள் சாதனையாளர்களாக மாறுவதில்லை. ஆனால், குக்கிராமங்களில் உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி பசியுடன் வாழும் ஏழை, எளிய மக்களிடம் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. இவற்றில் சில மட்டும் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. தனது வறுமையை பொருட்படுத்தாமல் ஓவியத்தில் சாதனை புரிவது ஒன்றே குறிக்கோள் என பல்வேறு படைப்புகளை படைத்து, சாதனைகளுக்கு சொந்தகாரராக மாறி கொண்டிருக்கும் இளம் ஓவியர் மணிகண்டனின் நிலை இதுதான்.




ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் என்னும் கிராமத்தை சார்ந்த இளம் ஓவியர் மணிகண்டன். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் வந்தது. சிறு வயதில் தந்தையை இழந்த இந்த ஓவியர். சிறுவயதில்  ஆரம்பித்து கோட்டோவியம், பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், அகர்லிக், ஆயில் பெயிண்டிங், சுவர் ஓவியம், தத்ரூப ஓவியம் ,போன்ற அனைத்து ஓவியங்களிலும் கைதேர்ந்தவர் ஆகினார். ஓவியம் வரைவது மட்டுமன்றி அடுத்தவர்களுக்கு இதனை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓவிய ஆசிரியர் பயிற்சியும்  முடித்தார். தான் கடந்து வந்த பாதையில் அடிப்படையில் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்து வந்தார்.  இதனைப் பாராட்டி அமைப்பியல் எழுதி பல விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது கலைத்துறையில் 20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் வரையும் ஓவியங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமாக இருக்கும், இதனைப் பாராட்டி கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் போன்றவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.




கிராமியப் பெண்களின் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து பரிசு பெற்றவர்.


ஓவியம் வரைவது கற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து கலைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தான் வாங்கிய பட்டங்களோ  தனக்கு இறைவன் கொடுத்த திறமைகளோ இவருக்கு உணவும் உடையும் அளிக்கவில்லை என்பதால் தொடர்ந்து இவரை வறுமை வாட்டி வதைக்கிறது. சிறு வயதிலேயே தந்தையை இழந்து  வறுமையின் பிடியில் வாழும் இவர்,முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தன் வறுமை குறித்து மனு அளித்தும் அரசு  இதுவரை எந்த ஒரு உதவிக்கரமும் நீட்டவில்லையென வருத்தம் தெரிவிக்கிறார்.




கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒற்றுக் கொள், எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கே சரியாமோ' என்றார் திரு.வி.க. ஆனால், பேரையூர் ஓவியர் மணிகண்டனுக்கு அவர் கற்றறிந்த ஓவியக்கலை  பசியைப் போக்கவில்லை மாறாக வறுமையை தந்துள்ளது. இவருடைய ஓவியத் திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் பாராட்டுப் பத்திரங்கள் கிடைத்தாலும் பசி போக்க ஒரு பணி கிடைக்கவில்லை. எனவே எத்தனையோ அரசு  பள்ளிகளில் ஓவிய பயிற்சி ஆசிரியர்கள் வேலை காலியாக உள்ள நிலையில், இவருக்கு ஒரு அரசுப் பள்ளியில் பணி நியமன உத்தரவை அரசு பிறப்பித்தால் இவரது வாழ்வு வளம் பெறும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. எந்த துறையாக இருந்தாலும், வெளி உலகில் மிகவும் புகழ்பெற்றவர்களைப் பற்றி மட்டுமே இந்த உலகம் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர் போன்ற இளம் ஓவியர்கள் அதீத திறமை இருந்தும் பிரபலம் அடையாததால் வறுமையும் பசியும் இவரை துரத்துகிறது திறமையுள்ள இளைஞர்களை  இந்த உலகம் அங்கீகரிக்க வேண்டும்.