தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த அகில இந்திய பாரா வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணி முதலிடம் பெற்றது. இதேபோல் ஆண்கள் பிரிவில் கர்நாடக அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
அகில இந்திய அளவிலான 11-வது சிட்டிங் பாரா வாலிபால் போட்டி கடந்த 3-ம் தேதி தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடந்த பாரா வாலிபால் போட்டியின் இறுதி போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, உத்ராகாண்ட், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணி முதலிடமும், கர்நாடக மாநில அணி இரண்டாமிடமும், தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மூன்றாமிடமும் பிடித்தன.
இதே போல் ஆண்கள் பிரிவில் கர்நாடக அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி இரண்டாமிடத்தையும், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணி மூன்றாமிடத்தையும் பிடித்தது.
தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு அணிகளிலிருந்தும் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி கோப்பைகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநில தலைவர் மக்கள் ஜி.ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செய்திருந்தன.