தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை குவித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிடக்கலையில் வானுயுர தமிழர்களின் பெருமைய உயர்த்தும் வகையில் பெரிய கோவிலை எழுப்பியவர் மாமன்னன் ராஜராஜ சோழன்.


மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றுத் திகழ்வதுடன், உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.




அந்த வகையில் இந்தாண்டும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு பாரம்பரிய இசைக்கருவிகளுடன் மாணவிகள் நாட்டியமாடி இசை அஞ்சலி செலுத்தினர்.


தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகுக்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு 1039 சதய விழா நேற்று முன்தினம் தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய சதய விழாவில் திருமுறை பாடல் கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இதில் முக்கியமாக தஞ்சை பெரிய கோவில் வளாகம் முழுவதும் பழங்கால இசை கருவிகளோடு நாட்டிய கலைஞர்கள் பங்கு பெறும் மாமன்னன் ராஜராஜ சோழன் விஜயம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 700க்கும் மேற்பட்ட நாட்டிய மாணவிகள் பங்கேற்றனர். சதய விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. முதலில் அரசு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாலையில் கருத்தரங்கம், ராஜராஜன் விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.