காவிரி பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஜனவரி 9ஆம் தேதி பெங்களூரில் பாதையாத்திரை தொடங்கி ஜனவரி 19 ஆம் தேதி மேகதாதுவில் போராட்டம் நடத்த போவதாக கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். இதனிடையே கர்நாடக காங்கிரஸ் கட்சியினரின் இப்போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராகவும், மேகதாதுவில் அனைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிஆர்.பாண்டியன் கூறுகையில் ; மேகதாதுவில் அணைக்கட்ட வலியுறுத்தி வருகிற ஜனவரி 9 ஆம் தேதி பாதயாத்திரை சென்று ஜனவரி 19 ஆம் தேதி மேகதாதுவில் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
ஜனவரி 18 ஆம் தேதி திருவாரூரில் இருந்து தஞ்சை, திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக சென்று மேகதாது எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். மேலும் காவிரியின் குறுக்கே ராசிமணல் பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய அணையின் கட்டுமான பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும், காங்கிரஸ் கட்சி போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழக காவிரி விவசாய சங்கத்தையும், தமிழக விவசாயிகளையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ்.அழகிரிக்கு கண்டனமும் தெரிவித்தார். கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரிக்கிறார் என்று குற்றம்சாட்டிய பிஆர்.பாண்டியன், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டங்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும் என்று எச்சரித்தார்.