பைபாஸ் ரைடர்ஸ் ஸ்டார்ட்... பொதுமக்கள் ஆதரவு: தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு ஏன்?

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர். 

Continues below advertisement

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது.

இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும்.

இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப்போது 60 நிமிடங்களில் கடக்கலாம். பேருந்து கட்டணம் சராசரியாக ரூ.40 ஆகும். இதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: "பைபாஸ் ரைடர்ஸ்" சேவை NH 36-ல் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பயண நேரம் வெகுவாக குறையும். பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இந்த பைபாஸ் ரைடர்ஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவசரமாக செல்ல வேண்டும் என்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காலதாமதமாக சென்ற நிலை மாறும் என்று தெரிவித்தனர்.  இந்நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்துக்கழக அலுவலகத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1 டூ 1 பஸ்களை (பைபாஸ் ரைடர்ஸ்) கால அட்டவணைப்படி இயக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு 15 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல் கும்பகோணத்திற்கு 20 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கும்பகோணத்திற்கு ஒரு நாளைக்கு 200 முறை தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கும், கும்பகோணத்திற்கும் பாயிண்ட் டூ பாயிண்ட் (1 டூ 1) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் கால அட்டவணைப்படி இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனியார் பஸ்கள் கடும் இழப்பை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்ட தலைவர் பீட்டர் தலைமையில் மாநில பொருளாளர் பி.எல்ஏ.சிதம்பரம், பொருளாளர் தியாகராஜன், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கோபால் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கும், கும்பகோணத்திற்கும் 1 டூ 1 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த பஸ்கள் கால அட்டவணைப்படி இல்லாமல், அவர்கள் இஷ்டத்திற்கு இயக்குகிறார்கள். இதனால் தனியார் பஸ்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன. நாங்களும் அரசுக்கு வரி செலுத்துகிறோம். தொடர்ந்து வருமான இழப்பை சந்திப்பதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் 1 டூ 1 பஸ்களுக்கு பர்மிட் வழங்கப்படவில்லை என தெரிவிக்கிறார்கள். ஆனால் காலஅட்டவணைப்படி, குறிப்பிட்ட நேரங்களில் வரிசையில் நின்று பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola