தமிழகம் முழுவதும் வரும் 14 ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, தஞ்சையில், பொங்கல் சமைப்பதற்காக தேவைப்படும் பாரம்பரியமானதும், இயற்கையானதுமான அகப்பையை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.


பொங்கல் திருவிழாவின் போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி, அதனை  மண்பானையில், புதியதாக மண்ணாலான அடுப்பில் வைத்து, பொங்கலிட்டு சூரியபகவானுக்கு  படைக்கும் விமர்சையாக கொண்டாடுவார்கள். அப்போது பொங்கல் பொங்கி வரும் போது, பொங்கலோ பொங்கல் என்று தட்டுகளை தட்டி, கோஷமிடுவார்கள்.  இதனால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஜதீகம்.




இப்பொங்கள் விழாவின் போது, மண்பானையில் உள்ள அரிசியை கிளறுதற்கு அகப்பையை முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  இந்த அகப்பை  தேங்காய் சிரட்டை எனும் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி வந்தனர். அகப்பையை பயன்படுத்தும் போது, அதன் மனமும் பொங்கல் சுவையும் மேலும் சுண்டி இழுக்கும்.


காலப்போக்கில் நாகரீகத்தின் வெளிப்பாடாக சில்வர், பித்தளை கரண்டிகளின் வரவால் அகப்பை காணாமல் போனாது. இந்நிலையில், தஞ்சையை அடுத்த   வேங்கராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் மட்டும் பொங்கல் தினத்தன்று பாரம்பரியமாக அகப்பையை மட்டும் பயன்படுத்தி , பொங்கல் பொங்கி அக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றார்கள்.இதற்காக அவ்வூரில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கல் தினத்தன்று அதிகாலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்கி விடுவார்கள். இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெற்றுக் கொள்வதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற்றிலை - பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.




இதுகுறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள  கணபதி கூறுகையில்,  எங்களது பல தலைமுறைகளாக காலந்தொட்டு நாங்கள் தச்சுத் தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறோம். இவ்வூரில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதில் ஈடுபட்டுள்ளோம். பொங்கல் பண்டிகை வந்து விட்டால் போதும் பாரம்பரியமான அகப்பை தயாரிக்கும் பணியில் இறங்கி விடுவோம். இதற்காக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் கொட்டாங்குச்சியை சேகரித்து வைத்து பின்னர் அதனை பொங்கல் நெருங்கும் நாட்களில், நான்கைந்து தினங்கள் தண்ணீரில் ஊறவைத்து அதனை உளியால் பக்குவமாக தோலை செதுக்குவோம். மூங்கில் மரத்தினை வெட்டி அதில் இரண்டடி துண்டுகளாக நறுக்கி கைப்பிடி தயாரித்து பின்னர் அதில் கொட்டாங்குச்சியை இணைத்துவிட்டால் அகப்பை தயாராகிவிடும். இந்த அகப்பையை யாரும் விலைக்கு விற்பனை செய்வதில்லை. எங்களது கிராம மக்களுக்கு பொங்கலன்று பயன்படுத்த இதை தான் வழங்குகிறோம். நாங்கள் அதிகாலையிலேயே வீடு வீடாக சென்று கொடுத்துவிடுவோம்.




பின்னர் பொங்கலன்றே மதியம் எந்தந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத்தமோ அங்கு சென்றால் அவர்கள் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு படி நெல் கொடுத்து எங்களை கௌரவிப்பார்கள். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்வதால் நாங்கள் இந்த தொழிலை மகிழ்வோடு செய்து வருகிறோம். பொங்கல் விழாவன்று எங்கள் பகுதியில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இயற்கை கரண்டியான அகப்பையை பயன்படுத்த வேண்டும் என்றார்.