வேளாண் பயிர் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை; முதல்வர் அறிவிக்க மறுப்பது ஏன்..? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி 

கொள்ளிட கரையோர கிராமங்களில் ஏற்பட்ட விவசாய பாதிப்புகளை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

Continues below advertisement

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் நாதல்ப்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் வெள்ளநீர் சூழ்ந்து பகுதிகளையும்,  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

Continues below advertisement


காவிரியில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரையிலும் இல்லாத வகையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் நெல், வாழை, சோளம், பருத்தி, காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட பணப்பயிர்களும் பூ உள்ளிட்ட தோட்ட பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளது. பாதிப்பு குறித்து இதுவரையிலும் கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுப்பது குறித்தான எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக முதலமைச்சர் அறிவிக்கதது ஏன்? என கேள்வி எழுப்பியவர், இது  மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.



இரண்டு ஆண்டுகளாக குருவை காப்பீடு செய்வதை தமிழக அரசு கைவிட்டு விட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு பொறுப்பு ஏற்று நிவாரணம் அறிவிக்க வேண்டும். நாதல் படுக்கை, முதலை மேடுதிட்டு, வெள்ளை மணல் ஆகிய 3 கிராமங்களில் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்க கிராமத்தின் அருகே மேடான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டி அவர்களை நிரந்தரமாக குடியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். 


வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு ஓட்டு வீடுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், குடிசை வீடுகளுக்கு ரூ.25000 நிதி உதவி வழங்கிட வேண்டும். கிராமங்களை மையமாக வைத்து புயல் வெள்ள பேரிடர் பாதுகாப்பு மண்டபங்களை உடன் அமைத்திட வேண்டும். கொள்ளிடம் பாலம் முதல் கடல் முகத்துவாரம் வரையிலும் இருபுறமும் சிமெண்ட் கான்கிரீட் சுவர்கள் அமைத்து வெள்ளநீர் உடைத்துக்கொண்டு வெளியேறுவதை தடுக்க முன்வர வேண்டும். மேலும், வெள்ளமணல் கதவணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து கல்லணை வரையிலும் ஏழு கிலோமீட்டர் ஓர் இடத்தில்  கதவணைகள் அமைத்து நிலத்தடி நீரை பராமரிக்க வேண்டும்.


மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். பாசன ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை விதித்திட வேண்டும். தமிழக அரசு ஒரு உயர்மட்ட குழுவை அனுப்பி காவிரி கொள்ளிடம் கரைகளின் அருகே பஞ்சப்பட்டி ஏரி முதல் வெளிங்டன் ஏரி வரை அனைத்து ஏரிகளுக்கும் உரிய பாசன வசதியை செய்து உபரி நீரை நிரப்ப  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான திட்டமிடலை உடன் துவங்கிட வேண்டும். காவிரியில் உபரி நீரை தடுத்து ராசி மணலில் அணை கட்டுவது ஒன்றுதான் 64 டிஎம்சி தண்ணீரையாவது தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். அதற்கு மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, கர்நாடக அரசிடம் ஒத்த கருத்து உருவாக்கி அணை கட்டுமான நடவடிக்கையை துவங்க காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும் என்றார். 


இந்நிகழ்வில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விசுவநாதன், ஒருங்கிணைப்பாளர் வேட்டங்குடி சீனிவாசன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola