தஞ்சாவூர்: மாறாத அன்பு, மறக்காத பண்புடன் உழவுக்கும், உணவுக்கும் உதவும் மாடுகளுக்கு விவசாயிகள் காட்டும் நன்றியுடன் கூடிய பட்டி பொங்கல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது தொன்று தொட்டு நம் முன்னோர் காலத்தில் இருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது.  இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.  


ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் பொங்கல் பண்டிகையை மிக உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.


மாடுகள் என்றால் செல்வம் என்று பொருள். அந்த காலத்தில் மக்கள் தங்கள் வாழ்வில் பசுக்களையும், காளைகளையுமே சிறந்த செல்வங்களாக நினைத்தனர். மற்றொரு நாடு மீது படையெடுக்க விரும்பும் மன்னன், முதலில் அந்த நாட்டின் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருவாராம்.  இதற்கு 'ஆநிரை கவர்தல் என்று கூறுவார்கள்.  பசுக்களைப் பகைவனிடம் பறிகொடுத்த மன்னன்,  போர் செய்து பசுக்கூட்டங்களை மீட்டு வருவான். பசுக்களை கவர கொடுத்து விட்டால் அது நாட்டையே கொடுத்ததற்கு சமம் என்று அக்காலத்தில் மன்னர்கள் நினைத்து வந்தனர். 




பெரும் போர்கள் அனைத்துமே  மாடுகளைக் கவர்வதிலும், மீட்பதிலுமே தொடங்குகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. பொங்கல் அன்று நாம் சூரியக் கடவுளை வழிபடுகிறோம். சூரியனே  உழவர்களின் உழவுத் தொழிலுக்கு உற்ற துணையாக இருந்து உணவு உற்பத்திக்கு உதவுகிறான். அவனுக்கு இணையான பணியை கால்நடைகளும் செய்கின்றன. விவசாய பணிகளிலும்,  அறுவடை செய்த நெல்லை சுமந்து சென்று  சேர்ப்பது வரையிலும் காளைகளின் பணி பெரியதென்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உணவான பால் கொடுத்து பசுக்கள். உதவுகின்றன. அத்தகைய கால்நடைச் செல்வங்களுக்குப் பொங்கலிட்டு வழிபாடு செய்து நன்றியைத் தெரிவிக்கும் நாள்  மாட்டுப் பொங்கல்.


தமிழகத்தின் சில இடங்களில் இதனை, 'பட்டிப் பொங்கல்' என்று அழைப்பதும் உண்டு. பட்டி என்றால் மாடுகளை கட்டி வைக்கும் இடம். இந்த நாளில் மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரிப்பார்கள். பின் மாட்டுக் கொட்டகைக்கு முன் பொங்கல் வைத்து மாடுகளுக்கு அன்புடன் ஊட்டி விடுவார்கள். பிறகு அவற்றை ஊர்வலமாக அழைத்துச் செல்வர். அங்கு மாடுகளுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் குங்குமம் வைத்து காதோலை, கருகமணி  அணிவித்து அலங்கரிப்பர். இதன் மூலம் மாடுகளுக்கு திருஷ்டி ஏற்படாது என்பது நம்பிக்கை.  


கதங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் உழைத்த காளை மாடுகள் மற்றும் பசு மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மக்கள் மாட்டுப்பொங்கலை கொண்டாடுகின்றனர். தொடர்ந்து அவரவர் வீடுகளில் வாசலில் ஆவாரம் பூ, எருக்கம் பூ வைத்து சாணத்தால் அமைக்கப்பட்ட நான்கு தடுப்புகள் கொண்ட ஒரு தொட்டி போன்ற அமைப்பு (சிறீய அளவு) வைத்திருப்பார்கள் அதில் ஒன்றில் தயிர் மற்றொன்றில் பூக்கள், மற்றொன்றில் திருஷ்டி கழிய வேண்டும் என்பதற்காக அடுப்புக்கரியை குழைத்து வைத்திருப்பார்கள். மற்றொன்றில் மஞ்சள் வைத்து அதற்கு முன் பக்கம் உலக்கையை வைத்திருப்பார்கள். இதை மாடு தாண்டி வீட்டுக்குள் வரும். இதனால் திருஷ்டி இல்லாமல் போய்விடும் என்பது மக்களின் ஐதீகமான நம்பிக்கை. 


பின்னர் அந்த சாணத்தில் அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பை மூடி வைத்துவிட்டு மறுநாள் காலை மீண்டும் மாட்டை அதே போல் மீண்டும் தாண்ட செய்வார்கள். இவ்வாறு தங்கள் அன்பையும் நன்றியையும் தங்களின் காளைகளுக்கும், மாடுகளுக்கும் மகிழ்ச்சியுடன் அளிப்பது தமிழர்களின் மறக்க முடியாத நெகழ்ச்சி தரும் தருணங்கள்.