தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ள பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. எத்தனை விலையாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கினர். பொங்கல் பண்டிகை தற்போதே களை கட்ட ஆரம்பித்துள்ளது.


தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக வருகிறது. இதே போல் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.


திருமண நாட்கள், பண்டிகை காலங்கள், விழா நாட்கள் ஆகியவற்றின் போது பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும். இதேபோல் பூக்களின் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும். இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்டிகைகளில் ஒன்று பொங்கல் விழா. தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த பண்டிகை விவசாயிகள் இயற்கைக்கு நன்றி கூறும் விழாவாகும். 4 நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. 




முதல் நாள் போகிப் பண்டிகை, மறு நாள் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், 4ம் நாள் காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது தேவையான பொருட்களை பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர். கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சிக் கொத்து என்று தேவையான பொருட்களை கிராமங்களில் சந்தையிலும், நகர் பகுதியில் மார்க்கெட்டிலும் வாங்குவர்.


தமிழர்களின் பாரம்பரியமிக்க பொங்கல் விழாவிற்கு கரும்பு, வாழைப்பழங்களின் தேவைப்போல் பூக்களின் தேவையும் அதிகம். இதனால் பூக்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. அதன்படி சாதாரண நாட்களில் கிலோ ரூ.500 முதல் ரூ.800 வரை விற்பனையான மல்லிகைப்பூ கிடுகிடுவென்று விலை உயர்ந்து நேற்று ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது.


இதேபோல் முல்லைப் பூ விலையும் உயர்ந்து கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் ரூ.ஆயிரம், செவ்வந்தி இருவகை ரூ.200, ரூ.100, அரளி பாக்கெட் ரூ.400, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கும் விற்பனையானது. இதேபோல் சம்பங்கி ரூ.200 வரையும், செண்டிப்பூ ரூ.150க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்து இருந்தாலும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்கள் வாங்க பூச்சந்தையில் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பூச்சந்தையில் பூக்களின் விற்பனை களைக்கட்டியது. பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று அடுத்தடுத்த நாட்களுக்கு பூக்களின் தேவை அதிகம் என்பதால் பொதுமக்கள் விலையை பற்றி யோசிக்காமல் பூக்களை வாங்கி சென்றனர்.


இது குறித்து பூ வியாபாரி ஏ.சி. சேகர் கூறுகையில், பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. வரத்து அதிகம் உள்ளது. இருப்பினும் விலையை பற்றி யோசிக்காமல் பொதுமக்களும் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி செல்கின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை தட்டுப்பாடின்றி பூக்கள் வரத்து வந்தபடியே உள்ளது. அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்த மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையும் நன்றாக உள்ளது என்றார்.