மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவுகள் வைக்கப்பட்டிருந்தது. கருப்பு கவுனி கூழ், பல வகை பயிர் வகை சுண்டல், அரச இலை கொழுக்கட்டை, பனை ஓலை, கொழுக்கட்டை உள்ளிட்ட பலவகை கொழுக்கட்டை, சுழியன், பயிறு கஞ்சி, உள்ளிட்ட ஏராளமான பாரம்பரிய உணவு வகைகள் சமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதனை கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர், பார்வையிட்டு உண்டு ருசித்தனர். மேலும், பாரம்பரிய உணவு திருவிழாவில் பாரம்பரிய கலைகளைப் போற்றும் வகையில் உறி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகளும் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, புடவைகள் அணிந்து வந்திருந்தனர். விழாவில் கல்லூரி மாணவர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமடைந்து காணப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், வீடியோ, போட்டோகிராபர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட செயலாளர் விஜயசுந்தரம், மாநில முன்னாள் தலைவர் சங்கர திருநாவுக்கரசு ஆகியோர் சங்க அடையாள அட்டை மற்றும் பொங்கல் பரிசினை வழங்கினர். தொடர்ந்து, சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினர். இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.
தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வேலு குணவேந்தன் தலைமையில் தமிழ்நாட்டை அவமதிக்கும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வரையும், தமிழ்நாட்டையும் அவமதிக்கும் வகையில் சட்டமன்றத்தை புறக்கணித்து வெளியே சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், தமிழ்நாடு என்ற பெயரை சொல்லாமல் தமிழகம் என்று குறிப்பிட்டு கலவரத்தை ஏற்படுத்தி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஏராளமான வழக்கறிஞர்கள் கண்டன முழக்கமிட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை சின்னக்கடை வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடை வீதியில் கச்சேரி பிள்ளையார் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. பழமையும் புகழும் வாய்ந்த இவ்வா லயத்தில் மார்கழி மாத சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது. சித்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், திரவியம், விபூதி, இளநீ உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாழ்வு வளம் பெற்று சுபிட்சம் அடைய வேண்டியும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.