தஞ்சாவூர்: திருச்சி மாநகரையே உலுக்கிய வாலிபர் படுகொலை சம்பவத்தில் அடுத்த சில மணி நேரங்களில் கொலையாளிகள் 5 பேரையும் ரவுண்ட் கட்டி தட்டித் தூக்கி உள்ளனர் திருச்சி போலீசார். பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்துள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அதே வேளையில், திருச்சி மாநகரின் மையப்பகுதியான பீமநகரில், காவலர் குடியிருப்பு வளாகத்திற்குள் சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டின் உள்ளேயே புகுந்து வாலிபர் ஒருவரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர் மர்மநபர்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அடுத்த சில மணிநேரங்களிலேயே போலீசாரின் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் கொலையாளிகள் 5 பேரும் தட்டித் தூக்கப்பட்டனர்.
திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 8:20 மணியளவில், தாமரைச்செல்வன் தனது பைக்கில் வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டார். அப்போது அவரை பின்தொடர்ந்து 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களுடன் துரத்தியுள்ளது. அந்த 5 பேரும் தன்னை கொல்லும் நோக்கத்துடன் துரத்துகின்றனர் என்று தெரிந்தவுடன் தாமரைச்செல்வன் தனது பைக்கை அங்கேயே போட்டுவிட்டு, பாதுகாப்பு தேடி பீமநகரில் உள்ள காவலர் குடியிருப்புக்குள் தப்பி ஓடியுள்ளார்.
காவலர் குடியிருப்பில் 'ஏ' பிளாக்கில் இருந்த தில்லைநகர் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவரது வீட்டிற்குள் தஞ்சம் புகுந்து தன்னை காப்பாற்றும்படி வேண்டியுள்ளார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ செல்வராஜ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது. வீட்டில் எஸ்.எஸ்.ஐ செல்வராஜ், அவரது மகள் மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் கதவை அடைக்க முயன்றும், கொலையாளிகள் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்து அந்த குடும்பத்தினர் கண் முன்னாலேயே தாமரைச்செல்வனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். அந்த மர்மக்கும்பலின் ஆவேசமான அரிவாள் வெட்டுகளில் தாமரைச்செல்வனின் தலை துண்டானது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
காலை நேரத்தில் காவலர் குடியிருப்புக்குள் அச்சமின்றி நுழைந்து வாலிபரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலைக்குப் பின் தப்பியோடிய கும்பலை பொதுமக்களும், காவலர் குடியிருப்பில் வசித்த பிற போலீசாரும் துரத்திச் சென்றதில், இளமாறன் என்ற ஒருவன் மட்டும் உடனடியாக சிக்கினான். மற்ற நால்வரும் தலைமறைவாகினர். கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், கோட்டை உதவி ஆணையர் சீதாராமன் மற்றும் வடக்கு துணை ஆணையர் சிபின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழி தீர்க்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட தாமரைச்செல்வனுக்கும், சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தாமரைச்செல்வன் தனது நண்பர்கள் மத்தியில் சதீஷை அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கியே தீருவேன் என்று சதீஷ் தன் நண்பர்கள் மத்தியில் சூளுரைத்துள்ளான். தாமரைச்செல்வன் எப்போது வீட்டை விட்டு கிளம்புவார், எந்த வழியாக செல்வார் என்பதை சதீஷ் நோட்டம் விட்டு பின்னர் தனது நண்பர்களான பிரபாகரன், கணேஷ், நந்து மற்றும் இளமாறன் ஆகியோருடன் சேர்ந்து தாமரைச்செல்வனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளான். அந்த திட்டத்தை நேற்று காலை அரங்கேற்றியுள்ளனர்.
காவலர் குடியிருப்புக்குள் புகுந்து போலீஸ்காரர் கண்முன்பே வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் திருச்சி மாநரையே உலுக்கி விட்டது. மேலும் நேற்று திருச்சி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தங்கிருந்த சுற்றுலா மாளிகையிலிருந்து 2 கி.மீ. தொலைவிற்குள் இந்த படுகொலை சம்பவம் நடந்தது போலீசாருக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அரசியல் அரங்கிலும் இது பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்தன. இந்த அழுத்தத்தை துடைத்து திருச்சி போலீசார் சிறப்பானவர்கள் என்பதை அடுத்த சில மணிநேரத்திலேயே நிரூபித்து விட்டனர்.
திருச்சி மாநகரக் காவல்துறை தனிப்படை அமைத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது. போலீசாரின் துரிதமாக செயல்பாடுகள் மற்றும் விசாரணையால், கொலை நடந்த சிலமணி நேரங்களிலே, முதல்வர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு புறப்படுவதற்கு முன்பாகவே தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான சதீஷ், கணேஷ், நந்து மற்றும் பிரபாகரன் ஆகிய 4 பேரையும் அதிரடியாக அள்ளித் தூக்கினர் திருச்சி போலீசார்.
பிடிபட்ட இளமாறனுடன் சேர்த்து, கொலையில் ஈடுபட்ட 5 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி போலீசாரின் மீது தெளிக்கப்பட்ட கண்டன கறைகள் அடுத்த சில மணிநேரத்திலேயே துடைக்கப்பட்டு விட்டது. கொலையாளிகளை தட்டி தூக்கி கெத்து காட்டி விட்டனர் திருச்சி போலீசார். இருப்பினும் கொடூரமாக நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சி மக்களை பெரும் அதிர்ச்சியில்தான் ஆழ்த்தியுள்ளது.