தஞ்சாவூர்: தஞ்சை - பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் லோடு ஆட்டோக்களில் அன்னாசிப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இரண்டு கிலோ அன்னாசிப்பழம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூரில் அன்னாசி பழங்கள் விற்பனை செம சூப்பராக நடந்து வருகிறது. 2 கிலோ அன்னாசி பழங்கள் ரூ.100க்கு விற்கப்படுவதால் மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மேலும் தற்போது குளிர்காலம் என்பதால் சளி தொந்தரவுக்கு அன்னாசி பழம் நல்லது என்பதாலும் அதிகளவில் மக்கள் வாங்குகின்றனர்.
கேரள மாநிலத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்ட அன்னாசி பழங்கள் விற்பனைக்காக தஞ்சாவூரில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல வகைகளில் பல்வேறு சத்துக்கள் நிறைந்த பழங்களில் அன்னாசி பழமும் ஒன்று. இதில் நம் உடலுக்கு தேவையான தாது பொருட்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. அன்னாசிப்பழம் பார்ப்பதற்கு கரடுமுரடான பூப்போல இருந்தாலும், உள்ளே பலாப்பழ சுளை போல இனிப்பாகவும், சற்று புளிப்பு சுவைகொண்ட கோடைகால பழவகைகளில் ஒன்றாகும்.
இதில் 75% நீர்சத்தும், மீதம் சர்க்கரை, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், நார்சத்து, ப்ரோமிலைன் என்ற சக்தி வாய்ந்த வேதிப்பொருள் அதிக அளவிலும், மருத்துவ நன்மைகள் உள்ளது. அன்னாசி பழங்கள் கேரளம், திண்டுக்கல், நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் கேரளாவில் விளைவிக்கப்பட்ட அன்னாசி பழங்கள் தஞ்சாவூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த பழங்கள் 2 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டன. குறைந்த விலையில் அன்னாசி பழங்கள் விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதுகுறித்து பழ வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: இந்த பழங்கள் இயற்கையான முறையில் பழுத்த பழங்கள். தஞ்சாவூரில் இவை விரைவில் விற்று விடும். கேரளா உட்பட பல்வேறு இடங்களில் விளைவிக்கப்பட்ட இந்த பழங்களை இங்கு உள்ள வியாபாரிகளிடம் மொத்த விலைக்கு விற்று நாங்கள் எங்கள் ஊருக்கு சென்று விடுவோம்.
ஆனால் இந்த முறை நேரடியாக பொது மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பழங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடங்களில் தரைக்கடையாக போட்டும், வாகனங்களில் வைத்தும் விற்பனை செய்து வருகிறோம். கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் அன்னாசி பழங்களுக்கு சுவை கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
அன்னாசிப்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, நினைவாற்றலை மேம்படுத்துகிறது, மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது, காயங்களிலிருந்து குணமடைய உதவுகிறது, மேலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமான உணவுக்கு ஒரு சிறந்த பழமாகும்.
வைட்டமின்கள் (C, B6), மாங்கனீசு, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எடை குறைப்புக்கு உதவுகிறது: குறைவான கலோரிகளையும் அதிக நார்ச்சத்தையும் கொண்டிருப்பதால், எடை மேலாண்மைக்கு உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27ம் தேதி சர்வதேச அன்னாசி பழ தினமாக கொண்டாடப்படுகிறது. பழங்களிலேயே ஊட்டச்சத்து நிறைந்த பழமாக அறியப்படும் அன்னாசி பழத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்லும் வகையில், இந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.