தஞ்சை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (48). மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி ஐயப்பன். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முருகானந்தம் தனது தம்பியுடன் நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியில் உள்ள ஆரோக்கியா நகருக்கு வாடகைக்கு குடி வந்தார். பின்னர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தம்பி ஐயப்பனுக்கு சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்த நிலையில் ஐயப்பன்-சத்யா இருவரும் வேலைக்காக அமெரிக்கா சென்றனர். சில மாதங்களிலேயே இருவரும் தாயகத்திற்கு திரும்பி வந்து விட்டனர். இந்நிலையில் ஐயப்பன் சத்யா இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சத்யா தாங்கள் குடியிருந்த வீட்டை பூட்டிக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து முருகானந்தம் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றிக் கொண்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை பார்த்து உடன் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து கலெக்டரிடம் அழைத்து சென்றனர். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் தனது குடும்பப்பிரச்னைகளை முருகானந்தம் கூறினார். தொடர்ந்து கலெக்டர் அவருக்கு அறிவுரை வழங்கி வல்லம் டிஎஸ்.பி. பிருந்தாவை சந்தித்து விபரங்கள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து டிஎஸ்பி., பிருந்தாவிடம் முருகானந்தத்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், முருகானந்தம் மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது தம்பிக்கு திருமணம் செய்து விட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தம்பிக்கும், அவரது மனைவிக்கும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், திடிரென வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இதனால் வெளியில் தங்க முடியாமல், பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்,மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானார்.
வேறு வழியில்லாமல் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்தார். ஆனால் அவரை விட மறுத்து, காலதாமதம் செய்துள்ளனர். மாற்றுத்திறனாளியாக முருகானந்தம், இங்கேயும் நடவடிக்கை கிடைக்காதோ என்ற பயத்தில், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனையறிந்த போலீசார் அவரை மீட்டு, மாவட்ட கலெக்டரிடம் அழைத்து சென்றனர். பின்னர் உரியநடவடிக்கை எடுக்க, உத்தரவிடுகிறேன் என்று கூறியதயைடுத்து,திரும்பி சென்றார். தனக்கு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று புலம்பினார் என்றனர்.