தஞ்சாவூர்: திருச்சி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. ஆமாங்க விரைவில் திருச்சி மெமு ரயில் பராமரிப்பு இடம் விரைவில் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு ரயில்வே திருச்சி மஞ்சத்திடலில் அமைக்கப்பட்டு வரும் மெமு (MEMU) ரயில் பராமரிப்பு ஷெட் பணிகளில் ஏறத்தாழ நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளது. இந்த ஷெட், வரும் மார்ச் மாதம் 2026க்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திருச்சி ரயில்வே கோட்டத்திலேயே முதல்முறையாக அமைக்கப்படும் மெமு பராமரிப்பு ஷெட் ஆகும்.
சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு வசதி கொண்ட ஷெட் இதுவாகும். இந்த புதிய ஷெட், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மற்றும் அதிவேகமாக இயங்கக்கூடிய மெமு ரயில்களின் சேவையை அதிகரிக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக புறநகர் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மெமு பராமரிப்பு ஷெட், பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அருகில் சுமார் 85,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ரூ.61 கோடியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில், நிர்வாகக் கட்டிடம் மற்றும் மெமு ரயில்களின் கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் இயந்திரப் பராமரிப்பு தேவைகளுக்கான நவீன கருவிக் கடைகளும் அமைக்கப்படும் என்று விபரமறிந்த வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாத மாத நிலவரப்படி, ரயில்களை ஆய்வு செய்வதற்கான பிட் லைன்களின் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. நிர்வாகக் கட்டிடப் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளது_ ஷெட்டை பொன்மலை பணிமனையுடன் இணைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாம். இந்த ஷெட் ஒரே நேரத்தில் நான்கு 12-கார் மெமு ரயில்களை நிறுத்தி பராமரிக்கும் வசதியைக் கொண்டிருக்கும் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த திட்டத்தை மார்ச் 2026க்குள் முடிக்கும் திட்டத்தில் உள்ளோம். தற்போது கோட்டத்தில் இயக்கப்படும் 36க்கும் மேற்பட்ட டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU) ரயில்களை படிப்படியாக மெமு ரயில்களாக மேம்படுத்த முடியும். இதற்காக, இந்த புதிய பராமரிப்பு வசதி மிகவும் உதவியாக இருக்கும் என்றனர்.
மஞ்சத்திடலில் ஷெட் அமைவதால், திருச்சி கோட்டத்திற்கு மெமு ரயில்களின் ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெமு ரயில்கள் ஆற்றல் சேமிப்பு மற்றும் மீளுருவாக்க பிரேக்கிங் (regenerative braking) வசதிகளை கொண்டது. மேலும் வசதியான இருக்கைகள், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன், சறுக்கு கதவுகள், உயிரி கழிப்பறைகள் (bio-toilets) வசதியை கொண்டு இருக்கும்.
இந்த மெமு ரயில்கள் திருச்சி – விழுப்புரம். திருச்சி – மயிலாடுதுறை. மயிலாடுதுறை – சேலம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இந்த புதிய மெமு ஷெட், திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் ரயில் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதன் மூலம், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும், ரயில்களின் வேகம் கூடும். இதனால் பயண நேரம் குறையும். மேலும், டீசல் ரயில்களுக்குப் பதிலாக மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். இத்தகைய திட்டம் திருச்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.