தஞ்சாவூர்: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள யாத்ரி நிவாஸில் கடந்த 10ம் தேதி ஒரு முதியவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வாடகைக்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அந்த அறைக்கு சென்ற பணியாளர் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து யாத்ரி நிவாஸ் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடன் அவர்கள் ஸ்ரீரங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேரும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாருக்கு அந்த அறையில் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி இறந்து கிடந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா துளசித்தானம் கீழத்தெருவை சேர்ந்த த.சுவாமிநாதன் (67), அவரது மனைவி செண்பகவள்ளி (64), மகள்கள் பவானி (41), ஜீவா (35) என்று தெரிய வந்துள்ளது. மேலும் அறையில் கிடைத்த கடிதத்தில் சுவாமிநாதன் தன் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து ொண்டதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளதாவது:
எங்களின் 2 மகள்கள் பவானி, ஜீவா ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். நானும் எனது மனைவியும் வயதானவர்கள். எங்களுக்கு பின்னர் எங்கள் மகள்களை யார் பாரமரிப்பார்கள் என்ற மன உளைச்சலில் நீண்ட காலமாக இருந்து வந்தோம். ஆதரவற்ற எங்களுக்கு எங்களின் மகள்களின் பராமரிப்பு குறித்து நீடித்த மனஉளைச்சல் இருந்து வந்தது. இதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மகள்களின் நிலையால் இப்படி ஒரு முடிவை பெற்றோரே எடுத்த சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.