தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்டில் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பவர்களால் பெண் பயணிகள் முகம் சுழித்து செல்லும் நிலை உள்ளது. இங்கு இலவச கழிவறை இல்லாத நிலையில் தகரம் வைத்து அடைக்கப்பட்ட பகுதியில் சென்று ஆண்கள் சிறுநீர் கழிப்பதில்லை. மேலும்  துர்நாற்றம் வீசுவதால் பெண்பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.


ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை


தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இங்கு கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும் அனைத்தும் கட்டண கழிவறைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு திருச்சி செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் 2 இடங்களில் இலவச கழிவறைகள் இருந்தன. சீரமைப்பு பணிகளின் போது இவை இடித்து அகற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.




இலவச கழிவறை இல்லை


ஒரு கழிவறை கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதால் அது தற்போது பயன்படுத்தப்பட முடியாத சூழலில் இருக்கிறது. தற்போது 2 இடங்களில் கட்டண கழிப்பறை மட்டுமே உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கட்டணம் தந்து செல்லும் நிலை தான் இருக்கிறது. அதேநேரம் பல பயணிகள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர்.


சுற்றுப்புற சுகாதார சீர்கேடு


இப்படி தொடர்ந்து செய்வதால் அப்பகுதியில் சிறுநீர் தேங்கி நின்று மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. புதிய பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் பள்ளிகள், கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன. கல்வி நிறுவனங்கள் செல்வதற்கு பஸ் ஸ்டாண்டிற்கு வரும் மாணவ, மாணவிகள் முகம் சுழிக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. அதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பெண் பயணிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை துணியால் பொத்திக்கொண்டு செல்லும் அவல நிலையே இருக்கிறது.


திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் பயணிகள்


குறிப்பாக மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியிலும், திருச்சி பஸ்கள் நிற்கும் பகுதியில் தான் அதிகம் பேர் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக தகரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும் பலர் சிறுநீர்  கழித்து விட்டு செல்கின்றனர்.


திருச்சி பஸ்கள் நிற்கும் பகுதியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க துணிகளை கட்டி வைத்து இருக்கின்றனர். ஆனால் அந்த துணிகளை கடந்து சென்று திறந்தவெளியில் பலர் சிறுநீர் கழிக்கின்றனர். பயணிகள் அந்த இடத்தை கடக்கும் பொழுது சுவாசிக்க கூட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ஏராளமான உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த துர்நாற்றம் உணவு சாப்பிட வரும் பயணிகளை அசூசை பட வைக்கிறது.


மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


துர்நாற்றத்தை போக்க மாநகராட்சி சார்பில் குளோரின் தூவிவிட்டு செல்கின்றனர். ஆனால் திறந்தவெளியில் சிறுநீர் இருக்கும் செயல் திரும்ப திரும்ப நடப்பதை தடுக்கும் வழிமுறைகளை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி பஸ் ஸ்டாண்டில் சிறுநீர் கழிக்க ஆங்காங்கே பீங்கான் அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு இலவசமாக சிறுநீர் கழித்து விட்டு செல்லலாம். அடிக்கடி தண்ணீர் ஊற்றி தூய்மை செய்வதால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுவதில்லை. அதேபோல் தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டிலும் சிறுநீர் கழிக்க இலவச ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதுதான் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. 


அபராதம் விதியுங்கள்... பயணிகள் கருத்து


இது குறித்து பயணிகள் தரப்பில் கூறுகையில்,  புதிய பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறைகள், காத்திருக்கும் அறைகள் கட்ட வேண்டும். திறந்தவெளி சிறுநீர் கழித்தலை தஞ்சை மாநகராட்சி தடுக்க வேண்டும். பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது என்ற தகவல் பலகை வைக்க வேண்டும். அத்தோடு அங்கு சிறுநீர் கழிக்க இயலாதவாறு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். அபராதம் விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  பொது மக்களும் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுகுறித்து காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.