தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயண சீட்டு எடுப்பதில் பயணிகளிடையே தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. எனவே சரியான முறையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


அம்ரிபாரத் திட்டப்பணிகள்


தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரூ.23 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பழைய கட்டிடங்களின் மேற்கூரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் தரும் ரயில் நிலையம் தஞ்சாவூர் ரயில் நிலையம். இந்த நிலையில்  அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.


நவீன வசதிகள் அமைக்கப்படுகிறது


இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, கண்காணிப்பு கேமரா, வைபை வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.


டிக்கெட் கவுன்டர் இடமாற்றம்


இந்த நிலையில் பணிகள் நடைபெற்று வருவதால் டிக்கெட் கவுன்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில் நிலையத்தின் உள்ளே ஒரு சில இடங்களில் மட்டும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகை இல்லாததால் பயண சீட்டு எடுக்க வரும் பயணிகள் டிக்கெட் கவுண்டர் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் அலைந்து வருகின்றனர்.


எனவே தஞ்சை ரயில் நிலையம் சார்பாக முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.