தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடந்த ஆராதனை விழாவில் தியாகராஜ சுவாமிகளுக்கு ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி செலுத்தினர்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா நிறைவு நாளான நேற்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.


சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த இடத்தில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 5 நாட்கள் விழாவாக தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.


26ம் தேதி மாலை தொடங்கிய விழாவில் தினமும் ஏராளமான இசைக் கலைஞர்கள் வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை இசைத்து சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.


நிறைவு நாளான நேற்று அதிகாலையில் தியாகராஜ சுவாமி வாழ்ந்த இடத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சன்னதியை சென்றடைந்தது. செயலாளர் தவில் வித்வான் அரித்துவாரமங்கலம் ஏ.கே .பழனிவேலு வரவேற்றார். விழாவில் கலெக்டர் தீபக் ஜேக்கப், அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், டெக்கான் மூர்த்தி, வக்கீல் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




பின்னர், காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. பின்னர் கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.


இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, நித்யஸ்ரீ மகாதேவன், சீர்காழி சிவசிதம்பரம், ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், காயத்ரி கிரிஷ், திருவனந்தபுரம் கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.


இதையடுத்து 10.30 மணிக்கு சுசித்ரா குழுவினரின் ஹரிகதை, 11 மணிக்கு  தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் இரவு 11  மணி வரை இசை நிகழ்ச்சிகள், ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. இதற்கிடையில் இரவு 9 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதியுலா நடந்தது.