தமிழ்நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் 2022, ஜனவரி 21 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார். பனை, தென்னை போன்ற மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான கள் பானமாகும். பனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் பாளை என்ற விழுதை சீவி, அதனை ஒரு சிறிய மண் பானையில்,உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி பின் மரத்துடன் கட்டுவர். மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும்.




பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சியை தர வல்லது. வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது.பனங்கள்ளிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. பனங்கருப்பட்டி பால், காபி, தேநீரில் கலந்து குடிக்க பயன்படுகிறது. மேலும் இனிப்புத் தின்பண்டங்கள் செய்ய பனங்கருப்பட்டி பயன்படுகிறது. சிறிய அளவில் கள் உற்பத்தி செய்பவர்களாலும், தனிப்பட்ட விவசாயிகளாலும் வீட்டு வருமானத்திற்காக கள் மரங்கள் வளர்ப்பது இவ்வகை மர இனங்கள் பாதுகாக்கலாம்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த பானம் குறித்து தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி, நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டின் அடையாளமாகவும், மென் பானமாகவும் இருப்பது கள். கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. உலக அளவில் தமிழ்நாட்டைத் தவிர எந்தவொரு நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. கள் ஆலகால விஷமும் இல்லை. அதே நேரத்தில் இறக்குமதி மதுக்களும், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களும் நல்லதல்ல. கள்ளையும், சீமைச் சாராயத்தையும் ஒன்றெனக் கருதி 33 ஆண்டுகளுக்கு முன்பு விதித்த தடை உள்நோக்கம் கொண்டது. கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய ஒரு போதைப் பொருள்தான் என நிரூபித்தால் 10 கோடி பரிசுவழங்கப்படும். மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஸ்ரீமன் நாராயணன் கமிட்டி, நீதியரசர் டேக்சந்த் கமிட்டி, கேரள அரசால் நியமிக்கப்பட்ட ஏ.பி. உதயபானு கமிட்டி, குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட என்.எம். மியாபோயி கமிட்டி என எந்தவொரு கமிட்டியும் கள்ளுக்குத் தடை விதிக்கச் சொல்லி அரசுக்குப் பரிந்துரை செய்யவில்லை.




பனை, தென்னை, ஈச்ச மரங்கள் இருந்தால், அவற்றிலிருந்து நீராகவோ, பதனீராகவோ, கள்ளாகவோ இறக்கியும், குடித்தும், விற்றும் கொள்ளலாம். மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி உள் நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தலாம். இதன் மூலம், மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தை முதலிடத்தில் நிலை நிறுத்தும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் 2022, ஜனவரி 21 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றார்.