தமிழக அரசின் மரமான பனை மரத்தை காக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத மத்தியில் பனை வாரம் கொண்டாட வேண்டும் பனை மர ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தினர்.


தமிழக அரசின் மரமான பனை மரத்தை காக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத மத்தியில் பனை வாரம் கொண்டாட வேண்டும் என பனை மரத் தொழிலாளர் நல வாரியத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.


பனை மரத்தை கற்பகத்தரு என அழைப்பர். இயற்கையாக வளரக்கூடிய தாவர வகையைச் சேர்ந்த பனை மரம் மழை நீரை அதிகளவில் பூமிக்குள் கொண்டு செல்லக்கூடிய தன்மையை பெற்றுள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் உயர பனை மரம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு கிணற்றைச்சுற்றி பத்து பனை மரங்கள் இருந்தால் போதும். அக்கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். அதே பனை மரம் கழுத்து முறிந்து சாகிறது என்றால் அப்பகுதி பாலை நிலமாக மாறுகிறது என்று பொருள். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை ஓலை, நுங்கு, பனம் பழம், பதநீர், கள், மட்டையின் காம்பிலிருந்து கிடைக்கும் அகனி, முற்றிய பனை மரத்தின் சப்பைகள் என 800 க்கும் மேற்பட்ட பொருட்களை மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். பனை ஓலை பொருட்களில் செய்யப்படுகின்ற தோடு, வளையல், செயின் போன்றவைகள் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது.




இப்பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளது. ஜீனிக்கு மாற்றாக பனை வெல்லத்தை உபயோகிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். இவ்வளவு பயன்பாடுகள் கொண்ட பனை மரங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து வருவது பனை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பனை மரங்களை வெட்ட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக பனை மரங்கள் காக்கப்பட்டுள்ளது. பனை பொருளாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத மத்தியில் பனை நாள் அல்லது பனை வாரம் அரசின் சார்பில் கொண்டாடப்பட வேண்டும். இக்கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடப்பட வேண்டும்.




பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட வேண்டும். பனை வெல்லம் அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை செய்யப்பட வேண்டும். தமிழக அரசின் ஆவின் பாலகத்தில் தயாரிக்கப்படும் இனிப்பு பண்டங்களை பனை வெல்லத்தில் செய்து வழங்க முன்வர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் பனை பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும். தமிழக அரசின் சார்பில் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியில்  பனை உணவுப்பொருட்களை சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள சுய உதவிக்குழுப் பெண்களுக்கு பனை ஓலைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அதன் மூலம் தயாரிக்கப்படும் நுங்கு, பனம் பழம், பதநீர், கள், மட்டையின் காம்பிலிருந்து கிடைக்கும் அகனி பனை ஓலை பொருட்களை அரசே கொள்முதல் செய்திட வேண்டும். இவ்வாறு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார்.