சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில்முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவர சுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். ஒம் எனும் பிரணவ மநதிரத்தை தந்தையான சிவபெருமானுக்கு, மகனாகிய முருகன் உபதேசம் செய்த தலம் என்பதால், முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.
முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும்.
இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமி கோயிலில் வருடந்தோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில் படிகளுக்கு படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு விசுவரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே புனித நீராடி கோயிலுக்கு வருகை தந்து நீண்டவரிசையில் நின்று வழிபட்டனர். பின்னர் 4.30 மணிக்கு தனூர்மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.அப்போது மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரமும், வைரவேல், வைரகீரிடமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து மகாதீபாரதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள சன்னதி முன்பு ஆண்களும், பெண்களும் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். முன்னிட்டு முருகன் கோயிலில் உள்ள 60 தமிழ் வருட தேவதைகளின் பெயரில் அமைந்துள்ள 60 திருப்படிகளுக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அறுபது குத்துவிளக்குகள் வைத்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
இதே போன்று புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரியகோயில், தஞ்சைபுரீஸ்வரர், மாரியம்மன் கோயில், முருகன் கோயில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர்கோயில், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஆதிகம்பட்டவிசுவநாதர் உள்ளிட்ட சிவாலங்களிலும் சாரங்கபாணிகோயில், சக்கரபாணிசுவாமி கோயில், ராமசுவாமிகோயில், வரதராஜபெருமாள் கோயில்களிலும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில், நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோயில் உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.