தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒருவர் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்றால் 12ஆம் வகுப்பு படித்தவர்கள் 5 ஆண்டுகளும், கல்லூரி இளங்கலை பயின்றவர்கள் 3 ஆண்டுகளும் சட்டக்கல்லூரியில் பயின்று இருத்தல் அவசியம். ஆனால் தற்போது மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத்தலைவர் வேலுகுபேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நேற்றைக்கு குற்றவாளிகளாக உள்ளவர்கள் இன்று வழக்கறிஞர்களாக உள்ளனர் என்றும், வழக்கறிஞர் தொழிலின் புனிதம் கெடுவதற்கு வெளிமாநிலமான ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட சட்டகல்லூரிகளில் நேரிடையாக வகுப்பில் படிக்காதவர்களுக்கு போலியாக சான்றிதழ்கள் வழங்கப்படுவதுதான் காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.  




இதனால் தமிழ்நாட்டில் இன்று ஏராளமானோர் தகுதியில்லாமல் வழக்கறிஞர்களாக தொழில் செய்து வருகின்றனர். ஆட்டோ, கார், மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுபவர்கள், அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், வட்டித் தொழில் செய்பவர்கள், டெய்லர் மற்றும் முழுநேர அரசியல்வாதிகள் பலர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்ததாக சான்றிதழ் பெற்று பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்கின்றனர். இதுபோன்று  போலியாக வழக்கறிஞர் தொழில் செய்பவர்களை தடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை வழக்கறிஞர் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம். ஏனென்றால் இந்த தொழிலிலே ஏராளமான குற்றவாளிகள் உருவாகியுள்ளதால் வழக்கறிஞர்களே குற்றசெயலில் ஈடுபடலாமா என்று நீதிமன்றம் அவ்வப்போது கண்டித்து கொண்டிருக்கிறது. ஆனால் இதை அனுமதித்ததும் நீதிமன்றங்கள்தான்.




எனவே, வெளிமாநிலங்களில் சட்ட படிப்புப் படித்தவர்கள் பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்வதற்கு முன்பு அவர்களின் சட்டப்படிப்பில் உண்மை தன்மையை ஆராயவும், அவர்கள் உண்மையில் வெளி மாநிலத்தில் தங்கிப் படித்தனரா? எந்த விடுதியில் தங்கியிருந்து படித்தனர்? எப்படி வருகைச் சான்றிழ் பெற்றனர்? என்பது குறித்துக் காவல்துறை உதவி ஆணையர் அல்லது டிஎஸ்பி அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரி ஒருவரை நியமித்து விசாரித்து, சான்றிதழ் பெறவும், போலி வழக்கறிஞர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மேலும், போலியான முறையில் போலியான சான்றுகளின் அடிப்படையிலே பிற மாநிலங்களில் இருந்து படித்து வரக்கூடியவர்களை வழக்கறிஞர்களாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்விலே தமிழ்நாடு வழக்கறிஞர் பேராயம் என்பது மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு பார்கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம்தான் அவர்கள் வழக்கறிஞர்களாக வருவதை அனுமதிக்கிறது. எனவே, வழக்கறிஞர் தொழிலின் புனிதத் தன்மையை கெடுக்கும் பிறமாநில கல்லூரிகளையும் தடை செய்ய வேண்டும். பிற மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு வழக்கறிஞர் பதிவையும் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.