தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி, புதுத்தெருவை சேர்ந்த கூத்தையன் மகன் தா்மராஜ் (54). இவர் வீட்டில் பூக்கட்டும் நாரை விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நாரில் தீப்பற்றியது. அப்போது பலத்த காற்று அடித்ததால், தீ மளமள என அருகிலுள்ள பகுதிக்கு பரவியது. இதனால் அப்பகுதிக்கு அருகில் இருந்த கா்ணன் (50) வீட்டில் பற்றியது. வீடு முழுவதும் தீ பரவி வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டர் திடிரென வெடித்தது. இதனால் தீ வேகமாக பரவியதால், அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்தும் வருபவர்களான அஞ்சலை, ராஜேஸ்வரி, முருகேசன், பூபதி, சைவராஜ், கல்யாணி, முருகேசன், மலா்கொடி, கீழத்திருப்பூந்துருத்தியை சோ்ந்த தனலெட்சுமி, சாந்தி ஆகிய 12 பேரின் வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் 12 வீட்டிற்குள் இருந்த பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து கருகியது.
12 வீடுகளில் தீபற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார், தீயணைப்பு துறையினருக்கும், மின்சார துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அங்குள்ள வீடுகளில் தீ பரவியதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களில், 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் குடிசை வீட்டில் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு சென்றதால், பூபதி என்பவருத்து லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயினால், மின்கம்பிகள் முழுவதும் எரிந்ததால், உடனடியாக மின்சாரத்துறையினர் மின்சாரத்தை துண்டித்தனர். பெரும் தீவிபத்தை அறிந்த பொது மக்கள், விவசாயிகள் திரண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து தகவலறிந்த தஞ்சை சப் கலெக்டா் வேலுமணி, தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழுத் தலைவா் அரசாபகரன், ஒன்றியச் செயலாளார் கௌதமன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமார், நகரச்செயலாளா் அகமதுமைதீன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கும் தலா 5 ஆயிரம் பணம், வேட்டி, புடவை, அரிசி, மண்ணெண்ணை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்கள். தீ விபத்து குறித்து நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரித்து வருகின்றார்.