தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட இயற்கை வேளாண் மண்டலங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறுகள் உள்ளிட்ட விவசாயம் அல்லாத எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல், டெல்டா மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால், ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் தோண்டப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகள்
திருவாரூர், அன்னவாநல்லூர், பெரியகுடி ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி நிறுவனம் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகளை அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி எப்படி இந்த ஆய்வு கிணறுகளை ஒ.என்.ஜி.சி தோண்டியுள்ளது என்ற மிகப்பெரிய கேள்வி டெல்டா மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது. இதன் மூலம் டெல்டா மாவட்டத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்ட நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது உறுதியாகியிருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகி மன்னார்குடி சேதுராமன் தெரிவித்துள்ளார்.
மறைமுகமாக கிணறுகள் – அம்பலப்படுத்திய எரிசக்தி துறை அறிக்கை
இது தொடர்பாக பேசியுள்ள சேதுராமன், 2024 – 25 எரிசக்தி இயக்க அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்தி எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் ஒ.என்.ஜி.சி நிறுவன, நீரியல் விரிசல் முறையில் மட்டும் நிறைவேற்ற சாத்தியமுள்ள ஷேல் ஆய்வு கிணறுகளை மறைமுகமாக தோண்டியிருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது என்றும் சேதுராமன் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.
முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சேதுராமன்
இது தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது என்றும் கடந்த 2023ஆம் ஆண்டில் வடசேரி பகுதியில் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்கம் திட்டத்தை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தது போல, இந்த விவகாரத்திலும் உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, டெல்டா மாவட்ட மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒ.என்.ஜி.சி நடவடிக்கைகள் குறித்தும் விதிகளுக்கு முரணாக மூன்று ஆய்வு கிணறுகள் தோண்டப்பட்டிருப்பது பற்றியும் உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ?
பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலத்தில் மத்திய பாஜக அரசு செயல்படுத்த முயலும் மன்னார்குடி மீத்தேன் திட்டம், புதுக்கோட்டை நெடுவாசல் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் கொண்டுவரப்பப்பட்டுள்ள எரிவாயு திட்டங்கள் அனைத்தையும் முற்றிலும் ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட மக்கள் அவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.