திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் என்கிற இடத்தில் மாங்குடி பாலத்திற்கு அருகில் சத்தம் இல்லாமல் இயங்கி வருகிறது ஒழுகும் ஓலை குடிசையில் ஒரு ரூபாய் இட்லி கடை. கிராமங்களில் உள்ள உணவகங்கள் கூட ஐந்து ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் இந்த காலகட்டத்தில் கடந்த 20 வருடங்களாக சேவை மனப்பான்மையுடன் லாப நோக்கை மனதில் கொள்ளாமல் 83 வயதிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று சொந்த காலில் நிற்கும் கமலா பாட்டி இந்தப் பகுதியில் உள்ள தினக்கூலிகளின் அன்னபூரணியாக திகழ்ந்து வருகிறார். தனது அம்மா புஷ்பாவின் மறைவுக்குப் பிறகு கடந்த 20 வருடங்களாக கமலா பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லி மற்றும் தோசை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். தினக் கூலிக்கு செல்வோர், அதிகாரிகள், எளிய மக்கள் என பலரும் இவரது கடையில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி சாப்பிட்டு பசியாறுகின்றனர்.
கமலா பட்டிக்கு கூலி வேலை செய்யும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் பேரப்பிள்ளைகள் என அனைவரும் இருந்தபோதிலும் சொந்த காலில் நின்று உழைத்து சாப்பிட வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த கடையை நடத்தி வருவதாக கூறுகிறார். மேலும் மகன்கள், மகள் என அனைவரும் அவரவர் குடும்பத்தினை நடத்துவதற்கே சிரமப்படும் சூழ்நிலையில் அவர்களுக்கு பாரமாக தான் இருக்க விரும்பவில்லை என்றும் அதே சமயம் என் உயிர் பிரியும் வரை ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றும் கூறுகிறார்.
இந்த இட்லி கடைக்காக கமலா பாட்டி விடியற்காலை 3 மணிக்கு எழுந்து மூன்று விதமான சட்னி தயார் செய்து இட்லி பொடி தயார் செய்து கடைக்கு 7 மணிக்கு வருகிறார். குடிதண்ணீர் எடுத்து வருவோருக்கு பத்து ரூபாயும் விறகுகள் எடுத்து வந்து உதவுவதற்கு பத்து ரூபாயும் வீட்டிலிருந்து கடைக்கு மாவு பாத்திரம் போன்றவற்றை எடுத்து வருபவருக்கு பத்து ரூபாய் என ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூலியாக தனக்கு உதவுபவர்களுக்கு கமலா பாட்டி கொடுக்கிறார். பத்தரை மணிக்கு இட்லி அனைத்தும் விற்று தீர்ந்ததும் வீட்டுக்குச் சென்று அடுத்த நாள் கடை நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளில் இறங்குகிறார். மழை வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் விடுமுறை இல்லாது தொடர்ந்து இந்த கடையினை அவர் நடத்தி வருகிறார். பாட்டி கடையில் ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைக்கும் என்று நம்பி வருபவர்களை ஏமாற்ற விரும்பாத காரணத்தினால் தினமும் கடை திறப்பதாக அவர் கூறுகிறார். நாள் ஒன்றுக்கு தனக்கு 300 முதல் 500 வரை வியாபாரம் நடப்பதாகவும் அதில் 50 ரூபாய் தனக்கு வருமானமாக கிடைத்தாலும் போதும் நான் சம்பாதித்து யாருக்கு சேர்க்கப் போகிறேன் எனது வயிற்றுக்கு சம்பாதித்தால் போதும் என்று கூறி வெள்ளந்தியாக பேசி சிரிக்கிறார் கமலா பாட்டி.
தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள் இவரது கடையில் இருபது ரூபாய்க்கு இட்லி வாங்கி தின்றாலே வயிறு நிறைகிறது என்று கமலா பாட்டியை மனதார வாழ்த்தும் அதே சமயத்தில் சிலர் இட்லி சாப்பிட்ட கணக்கை தவறாக கூறி பணத்தை குறைவாக கொடுத்து ஏமாற்றுவதுடன் சிலர் சாப்பிடுகின்ற தட்டையும் தூக்கிச் சென்று விடுவதாக கமலா பாட்டி வேதனையுடன் தெரிவிக்கிறார்.
தனது சொந்த மகன் வீட்டில் சாப்பிடுவதாக இருந்தாலும் காசு கொடுத்து சாப்பிடும் கமலா பாட்டி சோம்பி இருக்கும் இளைய தலைமுறையினரின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கும் ஆணிவேர் என்று சொல்லலாம். 83 வயதில் யாரையும் எதிர்பார்க்காமல் உடலில் உயிர் இருக்கும் வரை சொந்தக்காலில் நின்று வாழ விரும்புகிறேன் என்கிற கமலா பாட்டி ஒட்டு மொத்த தன்னம்பிக்கையின் ஒற்றை நம்பிக்கை என்று சொன்னால் அதில் மிகை ஏதுமில்லை. எனக்கு பிறகு இந்த கடையை யாரும் நடத்த போவதில்லை எனவே பழுதடைந்த இந்த கூரையை செப்பனிட்டு கொடுத்தால் என் உயிர் உள்ளவரை ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் என்று அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைக்கவும் கமலா பாட்டி தவறவில்லை.