பண்டைய தொண்டை நாட்டில் பாலாற்றின் வடக்குக் கரையில் அமைந்திருந்தது திருவேற்காடு என்னும் ஊரில், வேளாளர்களில் ஒருவர் சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தார். திருநீற்றை தன்னுடைய பெருஞ்செல்வமாகக் கருதிய அவர் சிவபிரானிடத்தும் அவர்தம் அடியார்களிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார். நாள்தோறும் சிவனடியார்களுக்கு அறுசுவையுடன் திருவமுது படைத்து பின்னர் தான் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தார்.  அவர் அடியவர்களுக்கு திருவமுது படைக்கும் செய்தி நாடு எங்கும் பரவியது. ஆதலால் திருவமுது செய்வதற்தாக அவரை நாடி வரும் சிவனடியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. தன்னை நாடி வந்த சிவனடியார்கள் எல்லோருக்கும் முகம் கோணாது, திருவமுது படைக்கும் பணியினை தவறாது செய்து எஞ்சியதை தான் உண்ணும் வழக்கத்தை நாள்தோறும் செய்து வந்தார் மூர்க்க நாயனார். நாளடைவில் அவருடைய செல்வ வளம் குன்றத் தொடங்கியது.ஆதலால் தம்முடைய பொருட்கள், நிலங்கள் ஆகியவற்றை விற்று திருவமுது படைக்கும் தொண்டினை தவறாது தொடர்ந்தார்.  சில காலம் கழித்து மூர்க்க நாயனாரிடம் விற்க பொருட்கள் ஏதும் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே அடியார்களுக்கு திருவமுது படைக்கும் தொண்டினை எப்படியாவது தொடர வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார் மூர்க்க நாயனார்.அப்போது அவருக்கு தம்முடைய இளம் பருவத்தில் கற்றிருந்த சூது விளையாட்டு நினைவில் வந்தது. 




சூது விளையாட்டில் வல்லவரான அவர், இறையடியார்களுக்கு திருவமுது படைக்கும் பொருட்டு பொருளீட்ட சூது விளையாட்டில் ஈடுபடலானார். சூதின் மூலம் கிடைத்த பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு திருவமுது படைக்கும் திருத்தொண்டினைத் தொடர்ந்தார். அவ்வூரில் இருந்தவர்கள் எல்லோரும் சூது விளையாட்டில் மூர்க்க நாயனாரிடம் தோற்றனர். அவருடன் சூது விளையாட அவ்வூரில் யாரும் முன் வரவில்லை. ஆதலால் இவ்வூரில் இனி இருந்து பயனில்லை என்று எண்ணிய அவர், இறைவனின் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்குச் செல்லலானார்.ஒரு திருத்தலத்திற்குச் சென்று இறைவனாரை வழிபட்டு, அவ்வூரில் உள்ளோரிடம் சூது விளையாடி பொருளீட்டி, அங்கே சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து எஞ்சியதை உண்டு, சில நாட்கள் தங்கியிருந்து சூது விளையாட யாரும் என்றபோது அடுத்த தலத்திற்குச் செல்லலானார்.இவ்வாறு செல்லுகையில் திருக்குடந்தை எனப்படும் கும்பகோணத்தை அடைந்து தங்கினார். இவ்வூரில் எவ்வளவு நாட்கள் இருந்தாலும் சூது விளையாடி பொருளீட்டி அடியார் தொண்டினைத் தொடரலாம் என்று எண்ணினார்.  ஆதலால் அவர் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். அதாவது சூது விளையாடும்போது முதல் ஆட்டத்தில் எதிராளியை வெல்ல விடுவார். இதனால் எதிராளிக்கு நம்பிக்கை ஏற்படும்.  ஆதலால் அடுத்த முறை பெரும் பணயத்தை வைப்பார். இந்த ஆட்டத்தில் வென்று விடுவார். இவ்வாறாக பொருளீட்டி அடியார் தொண்டினைத் தொடர்ந்தார்.  சூது விளையாட்டில் எதிராளி முறை தவறி ஆடினால் தன்னிடம் இருக்கும் உடைவாளால் எதிராளியைத் தாக்குவார்.




இவருடைய இத்தகைய மூர்க்க குணத்தால் எல்லோரும் அவரை மூர்க்கர் என்றழைக்க தொடங்கினர். சூதினால் பெற்ற பொருளின் மேல் ஆசை கொள்ளாமல், அப்பொருளை அடியார்களுக்கு திருவமுது செய்யும் பணிக்காக மட்டும் பயன்படுத்தி திருவமுது திருத்தொண்டினை தவறாது கடைப்பிடித்த மூர்க்க நாயனார் இறுதியில் இறைபதம் பெற்றார். இத்தகைய சிவனடியார்களுக்கு திருவமுத படைத்த மூர்க்க நாயானார் 63 நாயன்மார்களில் ஒருவரானார். இவரது குரு பூஜை விழா கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மூர்க்க நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம், வீதியூலா, திருமுறை பாராயணம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தில் செய்திருந்தனர்.