புதியதாக ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்றை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.



 

ஒமிக்ரான் தொற்று பரவலாக பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்று மற்றவர்களுக்கு எப்படி பரவி வருகிறது என்பது குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத் துறையினர் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது அதே நேரத்தில் அதற்கான அறிகுறிகள் மிக குறைவாக உள்ளது சிறிய அறிகுறிகள் உள்ளதால் பாதிக்கப்பட்ட நபருக்கு கூட தொற்று இருப்பதாக தெரியவில்லை. ஆகையால் அவர்கள் மூலமாக மற்றவருக்கும் இந்த தொற்று பரவிவருகிறது.

 

இதனை தடுக்க இரண்டு தடுப்புகள் மட்டுமே உள்ளன ஒன்று அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக திருவாரூர் மாவட்டத்தில் தினம்தோறும் தடுப்பூசி மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 80 சதவீகிதமும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 55 சதவீதம் உள்ளனர். இதனை அதிகப்படுத்தி 100 சதவீதம் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இரண்டாவதாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் அதிகமாக பொது மக்கள் ஒரே இடத்தில் கூட கூடாது இதற்கான விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.



 

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி உள்ளது. அவர் மட்டுமன்றி அவர் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனை செய்துள்ளோம் அனைவரையும் தனிமைப்படுத்தி உள்ளோம். இதில் கணவன் மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதால் அவர்களுடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வந்தவுடன் அவர்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும் அவர்களுக்கு தொடர்பான பரிசோதனை உடனடியாக செய்யப்படுகிறது. மேலும் சிறிய சிறிய அறிகுறிகள் இருந்தாலும் அனைவரும் தொற்றுக்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் சுகாதாரத் துறை சார்பில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மட்டுமன்றி அனைவரையும் தொடர்ந்து பரிசோதனை செய்வதன் மூலமாகவே இந்த ஒமிக்ரான் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடிகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



 

குறிப்பாக திருவிழாக்காலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூடி வருவதால் அதிக அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இப்பொழுது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா வரவுள்ளன. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து விழாக்களில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக கடைகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் அது மட்டுமன்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பு மையம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் மேலும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டிருக்கிறது என காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.