மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மற்றும் தரங்கம்பாடி தாலுக்காக்களை சேர்ந்த திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மாவட்ட ஆட்சியர் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முழுமையாக அமல்டுத்துவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த 8 நாட்களாக மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி மற்றும் தொடுவாய் கிராமங்களில் அதிகாரிகள் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வலைகள், படகுகளின் நீளம், இஞ்சின் திறன் குறித்து ஆய்வு நடத்தினர். தகவல் அறிந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர். தங்கள் கிராமத்தில் ஆய்வு செய்வது குறித்து எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் அனுமதியின்றி ஆய்வு மேற் கொள்வதாக கூறி அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் தங்கள் பயன்படுத்தும் வலைகள் 1983 சட்ட விதியின் கீழ் வராது எனவும் சுருக்குமடி வலையை பயன்படுத்திய கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி வாக்குவாதம் ஈடுபட்டனர். மேலும் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக போராடிய பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே தங்கள் கிராமத்தில் அனுமதி பெற்று ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி அதிகாரிகளை தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் தரங்கம்பாடி, தொடுவாய் கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மீன்வளத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக கடற்கரையில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் படித்து வருகின்றனா். இதுபோன்ற அரசால் தடை செய்த வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும்போது, அதிக கடற்பரப்பு மீன் பிடிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. அத்துடன், பல்வேறு வகையான சிறு மீன்கள் உட்பட அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதுடன், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு, மொத்த மீன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால், மீனவா்களிடையே பல்வேறு பிரச்னைகள் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மீன்வளமும் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டே மீனவா்கள் சுருக்கு மடி, இரட்டை மடி உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் படி நடவடிக்கை தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.