தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் நலத்திட்டங்களை புறக்கணித்து வருவதாகவும்,குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அதற்கு தான் என்னுடைய முதல் கையெழுத்து என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் அவரவர் வீடுகளில் போராட்டத்தில் இன்று ஈடுபடுவார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்திருந்தனர்

 

அதனடிப்படையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் அதிமுகவினர் தங்களது வீடுகளில் முன்பாக நின்று கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நன்னிலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் தன்னுடைய இல்லத்தின் வாசலில் நின்று கைகளில் பதாகைகளை ஏந்திக் கொண்டு போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர். குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு முறை வைக்காமல் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்,தற்பொழுது குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் கருதி தண்ணீர் திறப்பை அதிகரிக்கவேண்டும், தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக்கூறி இருந்த நிலையில் இதுவரை யாருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை உடனடியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.



கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுமான பணிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இதுவரை பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறைக்கப்படவில்லை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், தமிழ்நாட்டில் அறிவிப்பு இல்லாத மின் வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது உடனடியாக மின்வெட்டை போக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் 430 புரட்சிகளில் அதிமுகவினர் தங்களது வீடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



 

இதே நிதியமைச்சர் தான் நாங்கள் ஆட்சியில் இருந்தபொழுது எங்களுடைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதி மசோதாவை தாக்கல் செய்யும்பொழுது அதற்கு எதிராக  பேசியவர் தான் தற்போதைய நிதியமைச்சர். அப்பொழுது தெரியாத நிதிநிலைமை தற்போது மட்டும் எப்படி அவருக்கு தெரிந்து விட்டது, அப்பொழுது என்ன படித்தார்களோ, அதேதான் தற்பொழுதும் படிக்கிறார்கள். எனவே நிதியமைச்சர் கூறுவது தவறான செய்தி. அது மக்களை ஏமாற்றக்கூடிய செய்தி.தமிழகத்தின் நிதி நிலைமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆளுங்கட்சியினருக்கும் தெரியும், எதிர்கட்சியினருக்கும் தெரியும், அதிமுக மீது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பழி போடுகிறார். நிதி நிலைமையை சரிசெய்ய எங்களுக்கு வழி தெரியும் எனக் கூறியவர், அந்த வழியை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் என முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.