புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே திருமணமாகாத நர்சிங் கல்லூரி மாணவி தனக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் பிறந்த பெண் குழந்தையை உயிருடன் வீட்டு அருகே புதைத்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா (22). திருமணம் ஆகாதவர். இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். வினோதா ஊருக்கு வந்து செல்வது கடினம் என்பதால் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வினோதாவுக்கும் வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோதாவும், அவரது காதலருடன் நெருங்கி பழகி உள்ளனர். இதனால் வினோதா கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் வினோதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
நிறைமாத கர்ப்பமாக இருந்த வினோதா இன்று தனது வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. தனக்கு திருமணமாகாத நிலையில் கர்ப்பமாகி பெண் குழந்தையினை பெற்றெடுத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் பிறந்த பெண் குழந்தையை உடனே தனது வீட்டு வாசலிலேயே குழந்தையை உயிருடன் குழி தோண்டி புதைத்துள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பகுதிக்கு பார்த்தபோது குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்த போது குழந்தை உயிருடன் இருந்ததுள்ளது. உடன் அந்த குழந்தையை பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது. தற்போது அந்த குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பனையப்பட்டி போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தாய் வினோதாவிடமும் அவரது காதலனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வினோதா வீட்டிலேயே தனக்குத்தானே எப்படி பிரசவம் பார்த்தார். குழந்தையை அவர் மட்டுமே புதைத்தாரா அவருக்கு உடந்தையாக அவரது காதலன் இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.