தஞ்சாவூர்: கல்லில் கலைவண்ணம் கண்டார் என்று கேட்டு இருப்பீங்க. பார்த்து இருப்பீங்க. ஆனால் திருச்சி மாநகராட்சியில் மற்றொரு அவதாரமாக குப்பைகளை கலைப்பொருட்களாக மாற்றி காட்டி மக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளனர். இதற்கு ம க்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
திருச்சி மாநகராட்சி , குப்பைகளை கலைப் படைப்புகளாக மாற்றி, 'எனர்ஜி பார்க்' அமைத்து அசத்தியுள்ளது. இதுதான் தற்போது டாக் ஆப் திருச்சி சிட்டியாக மாறியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா? பயன்படுத்த முடியாத குப்பைகளை கொட்டுவதற்கு பதிலாக, அவற்றை வைத்து அழகான சிற்பங்கள் செய்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம் இது குப்பை மேலாண்மையில் ஒரு புதிய முயற்சியாகும். இந்த புதிய முயற்சிக்கு ஆரம்பமே அட்டகாசமான வரவேற்பை கொடுத்துள்ளது.
திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி நுண் உரம் தயாரிப்பு மையத்திற்கு வெளியே இருந்த காலியான இடத்தை, குப்பைகளால் ஆன கலைப் படைப்புகளைக் கொண்ட 'எனர்ஜி பார்க்' ஆக திருச்சி மாநகராட்சி மாற்றியுள்ளது. இனிமேல், மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டுவதற்குப் பதிலாக, குப்பைகளை சேகரித்து பிரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களே, இந்த நுண் உரம் தயாரிப்பு மையங்களில் காட்சிப்படுத்துவதற்காக கலைப் பொருட்களை உருவாக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்மலைப்பட்டி நுண் உரம் தயாரிப்பு மையத்திற்கு அருகில் சுமார் 200 சதுர அடி நிலம் காலியாக கிடந்தது. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளில் சில, பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தன. சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு இந்த குப்பைகளைக் கொண்டு கலைப் பொருட்களை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்தது. அந்த காலியான இடத்தை வேலி அமைத்து, குப்பைகளால் செய்யப்பட்ட நீர் ஊற்றுகள் மற்றும் திறந்த கிணறுகள் போன்றவற்றை அமைத்துள்ளனர்.
"நுண் உரம் தயாரிப்பு மையங்களில் உள்ள ஊழியர்கள், மறுபயன்பாடு செய்ய முடியாத குப்பைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலை வடிவங்களாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய கலைப் பொருட்கள், நுண் உரம் தயாரிப்பு மையங்களுக்கு அருகில் உள்ள காலியான இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும். இந்த முயற்சி, மையங்களுக்கு அருகில் உள்ள காலியான இடங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது_
மேலும், இந்த பூங்காவில் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்காக நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாநகராட்சி, ஐந்து மண்டலங்களில் உள்ள மற்ற 38 நுண் உரம் தயாரிப்பு மையங்களிலும் இது போன்ற பூங்காக்களை அமைக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு நுண் உரம் தயாரிப்பு மையமும் குறைந்தது இரண்டு வார்டுகளை உள்ளடக்கியது. மேலும், ஒரு நாளைக்கு 2 மெட்ரிக் டன் முதல் 15 மெட்ரிக் டன் வரை குப்பைகளை கையாள்கிறது.
இதேபோல், மாநகரம் முழுவதும் கண்டறியப்பட்ட 150 குப்பை பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் 59 இடங்களை மாநகராட்சி சீரமைத்துள்ளது. டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சேவை சாலை, அண்ணா நகர் (வார்டு 28) மற்றும் சண்முகா நகர் (வார்டு 25) போன்ற இடங்களில் குப்பைகள் கொட்டப்படும் இடங்கள், இருக்கை பெஞ்சுகள் மற்றும் நகரத்தின் முக்கிய அடையாளங்களின் மாதிரிகள் கொண்டு அழகுபடுத்தப்பட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. மின்மாற்றிகள் மற்றும் தெரு முனைகள் போன்ற இடங்களும் இதேபோல் மீட்கப்பட்டு அழகுபடுத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.