பெரும்பாலும் நரிக்குறவர்கள் (ஆதியன்) மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை சிக்கல் உள்ளதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ சமுதாய மக்கள் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.  




நாடோடிகளாக சுற்றித்திரியும் இப்பகுதி நரிக்குறவர்கள் சமுதாய மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012-ஆம் ஆண்டு அக்சஸ் உண்டு உறைவிடப் பள்ளி அங்கு தொடங்கப்பட்டது. 10 மாணவர்களுடன் மட்டும் தொடங்கிய இப்பள்ளியில் தற்போது 120 க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும்  இப்பள்ளியில் 2012- இல் படித்த மாணவர்கள் பலர் தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.  




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 'இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றம்" சார்பில் பல்வேறு தலைப்புகளில் பள்ளிகளுக்கு இடையே கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த கட்டுரைப் போட்டியில், உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவர்கள் சந்தோஷ், வெண்ணிலா, சக்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். கல்வியில் மட்டுமின்றி, இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓவியம், யோகா, சிலம்பம் போன்ற பல்வேறு துறைகளில் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு பல போட்டிகளிலும் கலந்துக்கொண்டு இப்பள்ளி மாணவர்கள் ஏராளமான பரிசுகளை குவித்து வருகின்றனர். பின் தங்கியுள்ள நரிக்குறவ மாணவர்களுக்கு இப்பள்ளி அளித்து வரும் ஊக்கம் பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.




மேலும் நாடோடி இனமான இவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமெனில் கல்வி ஒன்றே அதற்கான ஒரே வழி என்பதால் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்கள் இன மக்கள் குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வாங்கும் சிக்கல்களை போக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் எண்ணற்ற பழங்குடி மக்கள் கல்வி வெளிச்சம் கிடைக்காமல் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு எளிதில் கல்வி கற்க வழிவகை செய்தால் மயிலாடுதுறையில் மாணவர்கள் சாதித்தது போன்று தமிழ்நாடு முழுவதும் பல சாதனை மாணவர்களை உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.