தஞ்சாவூர்: இது செமையான திட்டம்ங்க... மரங்களுக்கும் மறுவாழ்வுங்க என்று பொதுமக்கள் பாராட்டுகின்றனர். எதை தெரியுங்களா?
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் வளைவில் புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக இந்த பகுதியில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இந்த மரங்கள் வேரோடுடன் எடுத்து வேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது. இப்பணிகளைதான் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. அதில் ஒன்று பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் திருக்காட்டுப்பள்ளி சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பூண்டி மாதா கோவிலுக்கு திரும்பும் இடத்தில் பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் வளைவும் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் பூண்டி மாதா கோவிலுக்கு சென்று வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து பூண்டிமாதா வளைவில் திரும்பும் போது அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் கட்டப்படும் இந்த பாலத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பாலம் கட்டப்படும் இடத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த பாலம் கட்டுவதற்காக மரங்களும் வெட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த மரங்களை வெட்டாமல் அப்படியே எடுத்து வேறு இடத்தில் நடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மரங்களை வேருடன் எடுத்து நடும் கோவை கிரீன் கேர் அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டனர். இதையடுத்து அவர்கள் பாலம் அமைக்கப்படும் இடத்தில் உள்ள மரங்களை வேறு இடத்தில் நடவு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். அதன்படி நல்ல உயிரோட்டமாக உள்ள 141 மரங்களுக்கு மறுவாழ்வு அமைக்கும் வகையில் வேறு இடத்தில் நட முடிவு செய்தனர்.
அதன்படி தற்போது மரங்களில் உள்ள கிளைகள் வெட்டப்பட்டு அதில் சாணம் வைத்து சாக்கு கொண்டு கட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் வேருடன் எடுத்து வேறு இடத்தில் நடும்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மரங்களை சுற்றிலும் 3 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு அதன் பின்னர் வேருடன் எடுத்து வேறு இடத்தில் நடப்படுகிறது.
மரங்கள் நடப்படும் இடத்தில் குழி தோண்டப்பட்டு அதனை 2 நாட்கள் ஆறவிட்டு பின்னர் அதில் தென்னை நார் கழிவுகள், மரத்தினுடைய தாய்மண், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி, பின்னர் மரத்தை பொக்லின் எந்திரம் மூலம் எடுத்து வந்து நடப்பட்டு வருகிறது. இந்த மரங்களுக்கு மறுவாழ்வு அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். தற்போது மரங்களை அகற்றி வேறு இடத்தில் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கிரீன் கேர் அமைப்பைச் சேர்ந்த சையத் கூறுகையில், எங்கள் அமைப்பு சார்பில் இதுவரை கோவை திருச்சி, திருநெல்வேலி, சென்னை என பல்வேறு இடங்களில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை இவ்வாறு வேருடன் எடுத்து நடவு செய்துள்ளோம். தற்போது தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான வேம்பு, புங்கன், உதியன் உள்ளிட்ட மரங்கள் 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளோம்.
முதலில் மரங்களை அகற்றி நடவு செய்வதற்கு முன்பு அந்த மரம் உயிரோட்டமாக உள்ளதா? என பார்ப்பதோடு அதன் தாய்மண் இருக்கும் பகுதிகளிலேயே அந்த மரங்களை அகற்றி நடவு செய்து வருகிறோம். நாம் ஒவ்வொரு மரம் நடும்போதும் அடுத்த தலைமுறைக்கு அது பயனுள்ளதாக இருக்கும். மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதன் மூலம் விரைவில் துளிர்விட்டு மரமாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சாலை பணிக்காக மரங்கள் வெட்டப்படும் போது ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடப்பட வேண்டும் என உத்தரவு இருந்தாலும் இது போன்ற 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான மரங்களை அகற்றி நடும்போது செய்யும்போது விரைவில் அந்த பகுதியில் மரங்கள் வளர்ந்து விடும். இவ்வாறு செய்வதன் மூலம் மரங்கள் வெட்டாமல் காப்பாற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.