மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16ம் தேதி யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோன்றிய பொழுது 22 ஐம்பொன்னாலான சிலைகளும், 55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. 




இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகள் கோயிலின் பாதுகாப்பு அறையில் வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாத்து வருகின்றனர். 17-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை 6 பேர்  கொண்ட  குழுவினர் சீர்காழி சட்டநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து  கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் எழுதிய பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், முதன்முறையாக அதிக அளவு பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு தற்போது இங்கு சீர்காழி தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர்.




இந்நிலையில் விலைமதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி இந்தியா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும், சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளது அதனை மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாதுகாப்பு குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கண்டார்.


 


இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீண்டும் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் கிடைக்க பெற்ற சிலைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் சிலைகளை எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்று  அவைகள் சரியாக உள்ளதா? காவல்துறை பாதுகாப்பு குறித்தும் மேலும், நாகப்பட்டினம் அருங்காட்சியக காப்பாட்சியர் வரவழைத்து அவர் பார்வையிட்டு சிலைகள் தொடர்பாக கருத்து கேட்பதற்காக ஆய்வு செய்ததாகவும்,  அருங்காட்சியக காப்பாட்சியர் தற்போது சிலை மற்றும் செப்பேடுகள் கெமிக்கல்ஸ் கொண்டு சுத்தம் செய்த பின்னர்தான் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும் என்றும், தொடர்ந்து வரும் 26 தேதி இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவுடன் காப்பாட்சியர் வருவதாகவும், அந்த குழுவில் ஆய்வுக்கு பின் அளிக்கும் தகவலின் அடிப்படையில்,  




பூமிக்கு அடியில் கிடைத்த சிலைகள் தொடர்பாக அரசு அதற்கான சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிலை தொடர்பாக கேசெட்டில் வெளியீட்டு அதன் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து எவ்வித முடிகளுக்களுக்கும் வர முடியாது, தொல்லியல் துறை அளிக்கும் தகவலின் அடிப்படையில் அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார். சீர்காழி சட்டநாதர் கோயில் பூமிக்கு அடியில் கிடைத்த சிலைகள், செப்பேடுகள் குறித்தும் முழு விவரம் அறிவதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். மேலும் இப்பகுதி பக்தர்கள் கோயிலில் கிடைத்த சிலைகளை வேறு எங்கும் கொண்டு செல்லாமல் கோயில் வளாகத்திலேயே அரசு அருங்காட்சியகம் அமைத்தது காக்க வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.