பங்கேற்கும் போட்டிகளில் பதக்கத்தை தனதாக்கி வெற்றி என அம்மாவின் கனவை நனவாக்கி வருகிறார் தஞ்சை மாணவி நித்யஸ்ரீ (18). பள்ளி படிப்பை பி.வி.செல்வராஜ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முடித்து கல்லூரியில் முதலாமாண்டு அடி எடுத்து வைத்துள்ள இந்த மாணவியின் அதிரடி சாதனைகள் புருவத்தை உயர்த்த வைக்கிறது. தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியை சேர்ந்த இந்த மாணவியின் அப்பா அரசு பஸ் ஓட்டுனர் பழனிவேலு. அம்மா மலர்கொடி. அக்கா ஒருவர், தம்பி ஒருவர். இதுதான் நித்யஸ்ரீயின் குடும்பம். தாயின் அன்பு என்ற அரவணைப்பு ரத்தத்தில் கலந்து, நரம்புகளை மீட்டி, உணர்வுகளை மெருகூட்டும். நம் கண்ணாடி மனதில் கல் வீசி விளையாடும் சமூகத்திலிருந்து நம்மை பாதுகாப்பவள் தாய். அதுபோன்றுதான் நித்யஸ்ரீயின் அம்மாவிற்கு தன் மகள் மருத்துவர் ஆக வேண்டும். தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பது லட்சியம், கனவு, ஆசை.
இன்றும் படிப்பு, பயிற்சி என்று இரட்டைக்குதிரையில் அட்டகாசமாக பயணம் செய்து வரும் நித்யஸ்ரீ தன் அம்மாவின் கனவை மேலும், மேலும் நிறைவேற்ற வேண்டும் என சிலம்பத்தை சுற்றியும், கராத்தேவில் கலக்கியும் பதக்க வேட்டையை தொடர்ந்து வருகிறார். இந்த வெற்றிக்கும், சாதனைக்கும் உறுதுணையாக பயிற்சி அளித்து வருகிறார் சிலம்ப ஆசான் ராஜேஷ்கண்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது. பதக்கப்பட்டியல்: சிலம்பத்தில் பெற்ற தங்கப்பதக்கம்- 12 (தேசிய அளவில் 4, மாநில அளவில் 3, மாவட்ட அளவில் 5) வெள்ளிப்பதக்கம் (மாநில அளவில் 2)வெண்கலப்பதக்கம் ( மாவட்ட அளவில் 3) கராத்தேவில் பெற்ற தங்கப்பதக்கம் - 24 (மாவட்ட அளவில் 12, மாநில அளவில் 6, சர்வதேச அளவில் 6) இரண்டு தற்காப்பு கலைகளிலும் பெற்ற வெற்றிக் கோப்பைகளின் எண்ணிக்கையும் ஏராளம், ஏராளம். நித்யஸ்ரீயின் வெற்றிகளுக்கு பின்னணியில் அவரது ஆசான் ராஜேஷ் கண்ணாவின் அக்கறையும், பயிற்சியும் அதிகம் நிரம்பி உள்ளது. ஏராளமான பதக்கங்களையும், வெற்றிகளையும் நித்யஸ்ரீ குவித்து வருவதற்கு ஆசான் ராஜேஷ்கண்ணாவும் ஒரு முக்கிய காரணம். ஏழை மாணவர்களுக்கு தன்னால் முயன்ற அளவில் சிலம்ப கலையை பணமின்றி மனம் நிறைந்து கற்றுத் தருகிறார். மாணவர்கள் நம் பாரம்பரியமிக்க சிலம்ப கலையை கற்க அதிகம் கவனம் செலுத்துகிறார். இதனால் இவரை தேடி வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.