கடந்த ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவியின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடம் 24 வினாடிகள் கொண்ட புதிதாக வெளியான வீடியோவில், விடுதி வார்டனின் கூடுதல் பணியால் தான் தனது படிப்பில் பின் தங்கியதாகவும், இதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகிறார். மேலும் மாணவி இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளர் அரியலூரைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.


தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற சொன்னதாக, மாணவி கூறிய வீடியோவால் தமிழ்நாட்டில் சர்ச்சை கிளம்பியது.  இந்த நிலையில், சமீபத்தில் வெளியான புதிய வீடியோவில், மாணவி மதமாற்றம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரியவந்துள்ளது.


புதிதாக கசிந்த வீடியோவில், “எப்போதும் விடுதியில் இருக்கும் சிஸ்டர் என்னிடம் கணக்குகளைச் சரி செய்யச் சொல்வார். ‘இல்லை அக்கா, லேட்டாக வந்தேன், ஒண்ணும் புரியல, அப்புறம் செய்வேன்’ என்று சொன்னாலும் அவ கேட்க மாட்டார். ‘பரவாயில்லை, நீ முதலில் கணக்குப் போட்டுக் கொடு, பிறகு உன் வேலையைச் செய்’ என்று கூறுவார். அவர் என்னை கணக்குகள் செய்ய வைப்பார். நான் சரியாக எழுதினாலும் தவறென்று சொல்லிவிட்டு ஒரு மணி நேரமாவது என்னை அதில் உட்கார வைப்பார். இதனால், என்னால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றேன். இது தொடர்ந்தால் என்னால் படிக்க முடியாது என்று நினைத்தேன்” என்று மாணவி வீடியோவில் கூறுகிறார்.


மேலும், "எல்லோரும் எழுந்தது முதல், நான் கேட்டைத் திறக்க வேண்டும், மோட்டாரை ஆன் செய்ய வேண்டும், அனைவரும் சாப்பிட்ட பிறகு, மோட்டார் சரியாக இயங்குகிறதா என்று சரிபார்க்க வேண்டும், வார்டன் எனக்கு எல்லா வேலைகளையும் கொடுப்பார்" கூறியுள்ளார்.


இந்த புதிய வீடியோவில்,  முத்துவேல், விடுதி அதிகாரிகள் தன்னிடம் பொட்டு அணிய வேண்டாம் என்று கூறினார்களா என்று கேட்கிறார். அதற்கு லாவண்யா எதிர்மறையாக பதிலளித்தார். இந்த வீடியோ தொடர்பாக போலீசார் புதிய கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுவரை, மாணவியின் மரணம் தொடர்பாக  62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.


தனது மகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரிய மாணவியின் தந்தையின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வருகிறது. மாணவியின் பெற்றோர் தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண