தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. 


கொசுக்களால் ஏற்படும் வைரஸ் நோய்


ஒவ்வொரு ஆண்டும் தேசிய டெங்கு தினம் மே மாதம் 16ம் தேதி அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. டெங்கு, இது கொசுக்களால் ஏற்படும் வைரஸ் நோய். இது ஒரு உலகளாவிய தொற்று நோயாகும். இது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவலாக உள்ளது. உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.


வீடுவீடாக சென்று டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்


தேசிய டெங்கு தினத்தை ஒட்டி தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட மகர்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் தேசிய டெங்கு தினம் 2024 முகாம் மற்றும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி முகாமிற்கு தலைமை வகித்து டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வழங்கினார். மாநகர் நல அலுவலர் டாக்டர் வி.சி. சுபாஷ் காந்தி முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் ஏடிஸ் கொசு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கூட்டுத் துப்புரவு பணி மேற்கொண்டு பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியாகாத வகையில் அகற்றப்பட்டது.




மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சிறிய தொட்டிகளில் பிளீட்சிங் பவுடர் கொண்டு சுத்த செய்தல் மற்றும் கொசுப்புழு உற்பத்தி ஆகாத வண்ணம் தொட்டியினை மூடி வைத்தும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வீடுகளில் சிமெணட் தொட்டி, டிரம், பக்கெட் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் உள்ளதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.


இதேபோல் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை கொசு புகாத வண்ணம் மூடி வைத்து வாரம் ஒரு முறை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏடிஸ் கொசுப்புழு வளராமல் தடுக்கப்படும். தற்போது தஞ்சாவூர் மாநகராட்சி எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும்ட கேட்டுக் கொள்ளப்பட்டது.




காய்ச்சல் கணக்கெடுப்பு பணி


தொடர்ந்து வீடுகள்தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை டெங்கு தடுப்பு பணியாளர்கள் மேற்கொண்டனர். 20 வார்டுகளிலுள்ள 38 தெருக்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதியாக கண்டறியப்பட்டு தனி கவனம் செலுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு களப்பணிக்கு செல்லும் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு உற்பத்தி காரணமாகும் இருக்கும் மூலப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.


இம்முகாமில் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்தவர் லெட்சுமணகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் துப்புரவு அலுவலர் சீனிவாசன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் அருள்மொழி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுகாதார ஆய்வாளர்கள் ராஜாங்கம் மற்றும் ஸ்டான்லி சுரேந்தர் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு நடமாடும் வாகன கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.


பின்னர் முகாமில் கலந்து கொண்டவர்கள் "அனைவரும் ஒன்றுபடுவோம்! டெங்குவை தடுப்போம்!" என உறுதிமொழி ஏற்றனர். இதே போல, கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.