சந்தை மதிப்பில் இழப்பீடு நிர்ணயிக்க கோரி CPCL நிர்வாகத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக அமைத்த பந்தலை அத்துமீறி காவல்துறை பிரித்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். திட்டமிட்டபடி 18ம் தேதி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

 

நாகை CPCL நிறுவன விரிவாக்கத்துக்காக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 690 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடத்தியுள்ளனர். இந்நிலையில், பனங்குடி பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் நலச்சங்க சார்பாக கடந்த 7ம் தேதி நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் 18 ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் போராட்டத்திற்காக CPCL நிறுவனம் எதிரே தனியாருக்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

 



 

அப்போது அங்கு வந்த DSP சரவணன் தலைமையிலான காவல்துறையினர் பந்தலை பிரிக்க அறிவுறுத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் பந்தலை பிரிக்க மறுத்ததால் அங்கு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை சார்பாக காத்திருப்பு போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த நிலையில் அத்துமீறி காவல்துறையினர் பந்தலை பிரித்ததாக புகார் தெரிவிக்கும் விவசாயிகள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காத CPCL நிர்வாகம் மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து திட்டமிட்டபடி வரும் 18ம் தேதி முதல் CPCL நிறுவன நுழைவாயில் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என உறுதி பட தெரிவித்தனர்.