நாகை அருகே கதண்டு (விஷ வண்டு) கடித்ததில் காயமடைந்த 7 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

 

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அருள்மதி (8), கீர்த்தனா (11), கிஷோர் (10), மற்றொரு கீர்த்தனா (11), மோனிகா (11), மோனிஷ் (11), வெண்ணிலா (8) ஆகிய 7 மாணவர்களை அப்பகுதியில் உள்ள பனை மரத்தில்  கூடு கட்டியிருந்த கதண்டு எனும் விஷ வண்டு தாக்கியது. இதில் இந்த பள்ளியை சேர்ந்த  4 சிறுமிகள், 3 சிறுவர்கள் உட்பட 7 மாணவர்கள் தலைஞாயிறு அரசு மேம்படுத்தப்பட்ட சமுதாய நல நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி சேர்க்கப்பட்டனர்.



 

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் மருத்துவர்களிடம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தவர் மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.



 

தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில் உடனடியாக பனை மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டு குளவிகளின் கூடு முழுமையாக தலைஞாயிறு தீயணைப்புத் துறையினர் மூலம் அழிக்கப்பட்டது. கிராமபுரம் அல்லது நகர்புற பகுதிகளில் கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் இருப்பது தெரிய வந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்னதாக அந்தப் பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு கேட்டுக்கொண்டார்.