நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே செருநல்லூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரவி இவருக்கு பானு என்கிற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லாத இவர் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த பிரபல சாராய வியாபாரியிடம், சட்டவிரோதமாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சாராயம் விற்று தரும்  வேலையில்  ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று  சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அன்று  சாராயம் விற்றதில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஏற்பட்டதில் அந்த வியாபாரி ரவியை தாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 27ம் தேதி ரவி இறந்துவிட்டதாகவும் 28ம் தேதி மாலை ரவியின் உடல் செருநல்லூர் கீழத்தெருவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ரவியின் உறவினரான ராதாமங்கலம் - எறும்புகன்னியை சேர்ந்த கண்ணதாசன் கீழ்வேளூர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 



 

இந்த நிலையில் ரவியின் உடல் புதைக்கப்பட்ட மயானத்தில் அவரது உடலை கீழ்வேளூர் வட்டாட்சியர் அமுதா முன்னிலையில், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள்  தோண்டி எடுத்து மைதானத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு ரவி இறந்தது குறித்து விவரம் தெரியவரும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்யும் வியாபாரியிடம் வேலை பார்த்த தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் மயானத்தில் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவை மதிக்காமல் ஒரு சில காவல்துறையினர் சாராய வியாபாரிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக  பணி செய்வதாலேயே வெளிமாநில மதுபானங்கள் மற்றும் சாராயம் புதுச்சேரி மாநிலத்தில் குறைந்த விலைக்கு வாங்கி தமிழக பகுதிக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதால் உயிரிழப்புக்களும் பல்வேறு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகவும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.