பெருங்கடம்பனூரில் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்படுவதாக கிராமப் பெண்கள் புகார் தெரிவித்தனர். விற்பனையை தடுக்கவும், சாராய வியாபாரிகளை கைது செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க மனு அளித்தனர்.

 

நாகை மாவட்டம்  கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பெருங்கடம்பனூரில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சாராய விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. சாராய வியாபரத்தை தடுக்க கோரி கிராம மக்கள் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்த பெருங்கடம்பனூர் ஜீவா தெரு கிராம மக்களை சாராய வியாபாரிகள் ஜெயராஜ், மாதவன், கலையரசன், வீரபாண்டி, பாலாஜி, மாரிச்செல்வம், குணா ஆகியோர் அடியாட்களை வைத்து ஆயுதங்களால் தாக்கியதாகவும், இதில் 5 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கும் அவர்கள் தொடர்ந்து தெருவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழ்வளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக புகார் அளித்த பெண்களை அவதூறாக பேசுவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் இன்று 50 க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க  திரண்டு வந்தனர்.



 

அவர்களை தடுத்து நிறுத்திய நாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இங்கர்சால் அவர்களிடம் சாதுரியமாக பேசி இரண்டு அல்லது நான்கு பேர் மட்டும் சென்று புகார் அளிக்கும்படி தெரிவித்த உதவி ஆய்வாளர் இங்கர்சாலை சூழ்ந்த கிராம பெண்கள் வேதனையை கொட்டி தீர்த்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள், சாராயத்தால் தங்களுடைய கணவன் மற்றும் பிள்ளைகள் காலையிலயே குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் தகராறில் ஈடுபடுவதால் வீட்டில் சமையல் செய்ய முடியாத நிலை ஏற்படுவதாகவும், கள்ள சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பல பேர் இறந்துள்ளதால் கிராமத்தில் பல பெண்கள் இளம் விதவைகளாக ஆகிவிட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.

 

சாராய விற்பனையை தடுக்க பலமுறை காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும்  எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும், புகார் அளிக்கும் மக்களையே அவதூறாக பேசி அலட்சியப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள் சாராய வியாபாரிகளுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்து அச்சத்தோடே வாழ்வதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண