நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்தார். முதற்கட்டமாக விழுந்தமாவடி புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி அடுத்துள்ள சின்னத்தம்பூர் பகுதியில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர், விவசாயிகளிடம் அழுகிய பயிர்களின் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நாகை அடுத்த செல்லூர் பகுதியில் நெற்பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்தார். மழைநீரால் சூழ்ந்துள்ள நாகை புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரில் நடந்து வந்து ஆய்வு செய்த அமைச்சர், அப்பகுதியில் விரைந்து வடிகால் வசதி, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், நாகை மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ரெட் அலர்ட் கொடுத்தாலும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக பாதிப்பை சந்திக்க கூடிய வேதாரண்யம், வண்டல், பழையாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பாக தங்க வைத்திருப்பதாக அமைச்சர் கூறினார். அதிக கனமழை காரணமாக மூழ்கியுள்ள நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.