நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்ரமணி மகள் சுபாஷிணி. பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தியதால் சுபாஷிணி கடந்த 30 ஆம் தேதி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் தாளாளர் ஆனந்த், முதல்வர் லட்சுமி காந்தன், வகுப்பாசிரியர் ஜென்சி ஆகியோர் மீது நாகூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நாகூர் போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த மூவரையும் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த மாணவியின் உறவினர்கள்  கடந்த ஒரு வார காலமாக சடலத்தை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 



 

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் பொறுப்பு சுரேஷ்கார்த்தி தலைமையில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் தாய் தந்தை, கல்லூரி மாணவிகள் என 9 பேரிடம் விசாரணை நடைபெற்றது. நீதிமன்ற விசாரணைக்கு பிறகு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் மாணவியின் உறவினர்களிடம்  நடைபெற்ற பேச்சு வார்த்தையில்  சடலத்தை பெற்றுகொள்வதாக உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த மாணவியின் சடலத்தை ஒரு வார காலத்திற்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

 



 

அதனை தொடர்ந்து காவல் உயரதிகாரிகள் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, மாணவியின் சடலத்தை நாகையில் இருந்து நாகூர் வரை உறவினர்கள் பேரணியாக எடுத்து சென்றனர். கல்லூரி மாணவியின் தற்கொலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தெரிவித்துள்ளார். நாகையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளதால் உறவினர்களின் ஒருவார கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.