நாகை மாவட்டம் அகர ஒரத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அனுப்புவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாட்ச்மேன் விடுப்பு எடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள மேஸ்திரியிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார்.
இதனை அறிந்த மர்ம நபர்கள் நெல் கொள்முதல் நிலையத்தின் வாசல் கேட்டின் பூட்டை உடைத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 125 நெல் மூட்டைகளை டாட்டா ஏசி வாகனம் மூலம் திருடி சென்றுள்ளனர். நெல் கொள்முதல் நிலைய பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் பருவகால உதவியாளர் பாக்யராஜ் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்த பாக்கியராஜ் மூட்டைகள் களவு போனதை உறுதி செய்து அதிகாரிக்கு தகவல் தெரிவித்த பின்பு திருட்டு சம்பவம் குறித்து பாக்யராஜ் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல் மூட்டைகளை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
நெல் மூட்டைகளை திருடி சென்றவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும், கிராமப்புறப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், போதிய பாதுகாப்பு அளிக்கவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல் கடந்த மாதம் பட்டமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 45 நெல் மூட்டைகள் அடையாளம் தெரியாத நபர்களால் திருடி செல்லப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சம்பவமாக அகர ஒரத்தூர் கிராமத்தில் 125 நெல் மூட்டைகள் திருடு போயிருப்பது விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.